சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாரை தேடுகிறது சிபிஐ: முன்ஜாமீன் மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றங்கள் மறுப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் பரிசீலிக்க இரு நீதிமன்றங்கள்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: ராஜீவ் குமாரை தேடுகிறது சிபிஐ: முன்ஜாமீன் மனுக்களை பரிசீலிக்க நீதிமன்றங்கள் மறுப்பு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க சிஐடி கூடுதல் தலைமை இயக்குநரும் கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருமான ராஜீவ் குமாரின் முன்ஜாமீன் மனுக்கள் பரிசீலிக்க இரு நீதிமன்றங்கள் மறுத்துவிட்டதையடுத்து, அவரை தேடும் பணியை சிபிஐ தீவிரப்படுத்தியுள்ளது. அதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த 13-ஆம் தேதி நீக்கியது. இதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு இருமுறை சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அவரது இருப்பிடத்தை கண்டறிய சிபிஐ தீவிரமாக முயன்று வருகிறது. இதுதொடர்பாக சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், "ராஜீவ் குமாரின் இருப்பிடத்தை கண்டறியவதற்காக சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிபிஐ முன் ஆஜராக அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாநில தலைமைச் செயலருக்கும், காவல் துறை தலைமை இயக்குநருக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்றும் வலியுறுத்தினர். அப்போது, செப்.9 முதல் 25-ஆம் தேதி வரை ராஜீவ் குமார் விடுமுறையில் உள்ளதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது' என்று தெரிவித்தன. 

நீதிமன்றங்கள் மறுப்பு: இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, ராஜீவ் குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க இரு நீதிமன்றங்கள் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டன.
வடக்கு 24 பர்கனா மாவட்டம், பரசாத் நகரிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில், ராஜீவ் குமார் தரப்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், முன்ஜாமீன் மனுவை விசாரிக்கும் அதிகாரம் இல்லை என்று கூறிவிட்ட சிறப்பு நீதிபதி சஞ்சீவ் தலுக்தார், செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, பரசாத் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ராஜீவ் குமார் சார்பில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், சாரதா நிதி நிறுவன முறைகேடு வழக்கு, தெற்கு 24 பர்கனா மாவட்டத்திலுள்ள அலிப்பூர் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி ரஷீதி, அவரது மனுவை பரிசீலிக்க மறுத்துவிட்டார். 

வழக்கு விவரம்: மேற்கு வங்கத்தில் செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனம், அதிக வட்டி அளிப்பதாக கூறி, லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து ரூ.2,500 கோடியை வசூலித்து மோசடியில் ஈடுபட்டது. இதுகுறித்து விசாரிப்பதற்காக, அப்போதைய பிதான்நகர் காவல்துறை ஆணையராக இருந்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 

இதனிடையே, இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2014-இல் உத்தரவிட்டது. அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில ஆவணங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவில்லை எனவும் குற்றம்சாட்டியது. 
இந்த வழக்கில் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக, கொல்கத்தாவிலுள்ள அவரது இல்லத்துக்கு சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜனவரியில் சென்றபோது, காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். 
ராஜீவ் குமாருக்கு ஆதரவாக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்னாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவின்படி, ஷில்லாங்கில் ராஜீவ் குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com