சிவபிரசாத் ராவ் மரணம்: சிபிஐ விசாரணைக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

ஆந்திர மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான கோடேல சிவபிரசாத் ராவ் (72) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு
சிவபிரசாத் ராவ் மரணம்: சிபிஐ விசாரணைக்கு சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்


ஆந்திர மாநில சட்டப் பேரவையின் முன்னாள் தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவருமான கோடேல சிவபிரசாத் ராவ் (72) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று அக்கட்சி தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வலியுறுத்தியுள்ளார் . 
தெலங்கானா மாநிலம், ஹைதராபாதில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிவபிரசாத் உடலுக்கு சந்திரபாபு நாயுடு செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினார். அப்போது, சிவபிரசாத் ராவை, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு கொலை செய்து விட்டது என்றும், இதுகுறித்து சிபிஐ விசாரணை தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இதுதொடர்பாக  செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
எனது அரசியல் வாழ்க்கையில், நான் இதுவரை 11 முதல்வர்களைப் பார்த்துள்ளேன். நானும் அந்தப் பதவியை வகித்துள்ளேன். ஆனால் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியைப் போன்ற, ஒரு முதல்வரை பார்த்ததில்லை. சிவபிரசாத் ராவின் மரணம், தற்கொலை அல்ல. மாநில அரசு அவரைக் கொன்று விட்டது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பேரவையின் பொருள்களைத் திருடியதாக சிவபிரசாத் ராவ் மீது மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது. அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப் பதிவு செய்தது. எவ்வித விசாரணையும் இன்றி, இவ்வாறு வழக்குப் பதிவு செய்தது சட்டப்படி குற்றமாகும்.  
பேரவையின் மரச்சாமான்கள் தன் வீட்டில் இருப்பதாகவும், அதை எடுத்துச் செல்லுமாறும், தற்போதைய பேரவைத் தலைவருக்கு சிவபிரசாத் ராவ் இரண்டு முறை கடிதம் எழுதினார். எனினும், அவர் மீது  மரச்சாமான்கள் திருட்டு வழக்கை அரசு பதிவு செய்தது. மாநிலத்தில் பயங்கரவாதிகளின் ஆட்சியை விட  மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. 
பல்நாடு பகுதியின் புலியாக வலம் வந்த சிவபிரசாத் ராவை, மனதளவிலும், உடலளவிலும் மிகவும் காயப்படுத்தினர். காவலர் முதல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வரை யாரெல்லாம் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு துணை நின்றார்களோ அவர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது ஆளும் அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என தெளிவாகத் தெரிகிறது என்று சந்திரபாபு நாயுடு கூறினார்.
ஆந்திரத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 2014 முதல் 2019-ஆம் ஆண்டு வரை முதல்வராகப் பதவி வகித்தபோது சட்டப் பேரவைத் தலைவராக இருந்தவர் கோடேல சிவபிரசாத் ராவ். குண்டூர் மாவட்டத்தில் இருந்து தொடர்ந்து 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில், சட்டெனபள்ளி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். இந்நிலையில் அவர், திங்கள்கிழமை மர்மமான முறையில் இறந்தார். பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com