தேசப் பாதுகாப்பில் சமரசத்துக்கு இடமில்லை: அமித் ஷா உறுதி

இந்தியாவின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. நமது நிலப்பகுதியில் ஓர் அங்குலம் அளவுக்கு ஆக்கிரமிக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
தில்லியில் இந்திய மேலாண்மைக் கூட்டமைப்பின் 46-ஆவது தேசிய மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
தில்லியில் இந்திய மேலாண்மைக் கூட்டமைப்பின் 46-ஆவது தேசிய மாநாட்டில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.


இந்தியாவின் பாதுகாப்பில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை. நமது நிலப்பகுதியில் ஓர் அங்குலம் அளவுக்கு ஆக்கிரமிக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா  தெரிவித்தார்.

இது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அகில இந்திய மேலாண்மைக் கூட்டமைப்பின் (ஐஏஎம்ஏ) 46ஆவது தேசிய மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்தியாவின் பாதுகாப்பில் எந்தச் சமரசத்தும் இடமில்லை. நமது நிலப்பகுதி அங்குலம் அளவுக்கு ஆக்கிரமிக்கப்படுவதையும் சகித்துக் கொள்ள மாட்டோம். அது போன்ற சூழலை கடுமையாக அணுகுவோம்.

நமது படைவீரர்களின் ஒரு சொட்டு ரத்தமும் வீணாவதை அனுமதிக்க மாட்டோம். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடத்தியபோது விரிவான தேசிய பாதுகாப்புக் கொள்கை வகுக்கப்படவில்லை. நாட்டின் பாதுகாப்புக் கொள்கை மீது, வெளியுறவுக் கொள்கை ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, அகண்ட பாரதம் என்ற லட்சியத்தை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். கடந்த 2014-இல் மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன், நாட்டில் எங்கு பார்த்தாலும் குழப்பமும் பதற்றமும் நிறைந்து காணப்பட்டது. 
மிகப்பெரிய ஊழல்கள் நடைபெற்றதோடு, எல்லைப் பகுதிகளில் உரிய பாதுகாப்பு இல்லாத சூழலும் காணப்பட்டது. படைவீரர்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருந்தனர். மத்திய அரசோ கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் முடங்கிக் கிடந்தது. 

நாட்டில் கடந்த 2013-இல் எங்கு பார்த்தாலும் அதிருப்தி நிலவியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அப்போது, நாட்டின் தலைமைக்கு தெளிவான கண்ணோட்டம் இல்லை. பொருளாதார நிலை மோசமாக இருந்தது. 
பெண்கள் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் கருதினர். இளைஞர்கள் அதிருப்தியில் இருந்தனர். அப்போது ஒவ்வொரு மத்திய அமைச்சரும் தன்னை பிரதமராகவே பாவித்துக் கொண்டிருந்தார். அப்போதைய பிரதமரை (மன்மோகன் சிங்) யாரும் பிரதமராக நினைக்கவில்லை. அந்தச் சூழலில், கூட்டணி ஆட்சி முறை குறித்தே மக்கள் சந்தேகம் கொண்டிருந்தனர். 

கூட்டணி ஆட்சி முறை இந்தியாவில் தோல்வியடைந்து விட்டதா என்றும் அவர்கள் யோசிக்கத் தொடங்கினர். சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகள் கடந்த பிறகு, இந்நாட்டை உருவாக்கிய தலைவர்கள் கண்ட கனவு நிறைவேறியதா என்ற கேள்வி மக்களின் மனதில் எழுந்தது. 
அதைத் தொடர்ந்து, 2014 மக்களவைத் தேர்தலில் மக்கள் அளித்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பால், நாட்டில் 30 ஆண்டுகளாக நீடித்து வந்த கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சிக்கு (பாஜக) அறுதிப் பெரும்பான்மை பலம் கிடைத்தது.

2014 முதல் 2019 வரை மத்தியில் முடிவெடுக்கக் கூடிய  தீர்மானமான அரசை மக்கள் கண்டனர். பொதுவாக ஐந்து முக்கிய முடிவுகள் 30 ஆண்டுகளில் எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் மோடி அரசின் முதல் ஐந்து ஆண்டுகளில் 50 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அவற்றில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு, பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட துல்லியத் தாக்குதல், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கு ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் ஆகியவை சில உதாரணங்கள். தற்போது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும் அந்த நடவடிக்கைகளில் அடங்கும். இவை துணிச்சலான முடிவுகள். 

மோடி அரசு எப்போதுமே யாரையும் திருப்திப்படுத்துவதற்காக முடிவுகளை எடுப்பதில்லை. மாறாக, மக்களின் நல்வாழ்வுக்காகவே முடிவுகளை எடுக்கிறது. இந்தியாவில் நல்லாட்சி நடைபெறும் காரணத்தாலேயே எட்டு நாடுகள் தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமருக்கு வழங்கியுள்ளன.
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளைப் பொறுத்தவரை , சில ஆரம்பப் பிரச்னைகள் இருக்கலாம். அவை விரைவில் முடிந்து விடும். ஜிஎஸ்டி வரிவிதிப்பு விவகாரத்திலும் சில பிரச்னைகள் இருந்தன. எனினும், அதைத் தாண்டி ஒரு மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி வசூல் என்பதை நம்மால் பல முறை வசூலிக்க முடிந்தது. ஆரம்பத்தில் சில சிரமங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் சீர்திருத்தங்கள் ஒட்டுமொத்தமாக நன்மை பயக்கும்.
சாலை அமைப்பு, புதிய ரயில் பாதைகள் அமைப்பு, இலவச எரிவாயு இணைப்பு, மின்சார வசதி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. வரும் 2022ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு, எரிவாயு இணைப்பு, கழிப்பறை வசதி, மின்சார இணைப்பு, வங்கிக் கணக்கு ஆகியவை இருக்கும். மக்களுக்கு கண்ணியத்துடன் வாழ்வதற்கான உரிமையை நாங்கள் வழங்குகிறோம்.

பயங்கரவாத முகாம்கள் மீது ராணுவம் நடத்திய தாக்குதல் தொடர்பாக அனைவரும் பெருமிதம் கொள்கின்றனர். ஆனால் அது போன்ற துணிச்சலான முடிவை எடுப்பதற்கு முன் பல்வேறு அம்சங்களும் பரிசீலனை செய்யப்படுகின்றன. 
எனவே அது போன்ற முடிவுகளை எடுப்பது சுலபமல்ல. எனினும் துல்லியத் தாக்குதல் நடவடிக்கையானது, இந்தியா குறித்த உலகத்தின் பார்வையை மாற்றியுள்ளது என்றார் அவர்.

ஹைதராபாத் விடுதலை நாளுக்கு வாழ்த்து
ஹைதராபாத் நிஜாம் மன்னரின் கட்டுப்பாட்டில் இருந்து நிலப்பகுதிகள் மீட்கப்பட்டு, அவை இந்தியாவுடன் கடந்த 1948ஆம் ஆண்டுசெப்டம்பர் 17ஆம் தேதி இணைந்தது. 
இதை நினைவுகூர்ந்து ஹைதராபாத் விடுதலை தினத்தையொட்டி மக்களுக்கு அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் சுட்டுரையில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், தெலங்கானா, மராத்வாடா, ஹைதராபாத்-கர்நாடகா ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு ஹைதராபாத் விடுதலை நாள் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் சமஸ்தானப் பகுதி இந்தியாவுடன் இணைய எடுக்கப்பட்ட நடவடிக்கையில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com