பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஓர் அங்கம்; அதனை நிச்சயம் ஒருநாள் மீட்போம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்போம்: வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஓர் அங்கம்; அதனை நிச்சயம் ஒருநாள் மீட்போம் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியாவின் கருத்துகளுக்கு இப்போது உலக அளவில் மதிப்பு உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசப் பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று வரும் சூழலில், வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்று, அண்மையில் 100 நாள்கள் நிறைவடைந்தன. இந்த 100 நாள்களில் வெளியுறவு அமைச்சகத்தின் சாதனைகள் மற்றும் முக்கியப் பணிகள் தொடர்பாக, அந்த துறையின் அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தில்லியில் செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தார். வெளியுறவுத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, அவர் செய்தியாளர்களை சந்திப்பது இதுவே முதல்முறையாகும்.

சுமார் 75 நிமிடங்கள் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, ஜம்மு-காஷ்மீர் விவகாரம், எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்திய-அமெரிக்க உறவுகள் என பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பான கேள்விக்கு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் ஓர் அங்கம்; இந்த நிலைப்பாட்டில் எப்போதுமே உறுதியாக இருப்போம். ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியாவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாட்டுக்குள் நிச்சயம் ஒருநாள் வரும் என்று அவர் பதிலளித்தார். 

மேலும், தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை இலக்குகளுக்கு இடையே வலுவான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியது, இந்த அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். உலக அளவில் இந்தியாவின் குரலுக்கு இப்போது முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. ஜி-20, பிரிக்ஸ் உள்ளிட்ட கூட்டமைப்புகளின் கூட்டங்களில் இந்தியாவின் கருத்துகள் முன்பைவிட ஓங்கி ஒலிக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கரவாதம், ஜம்மு-காஷ்மீருக்கான  சிறப்பு அந்தஸ்து ரத்து உள்ளிட்ட விவகாரங்களில், நமது நிலைப்பாடு உலக அரங்கில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

காஷ்மீர் விவகாரத்தில் கவலை வேண்டாம்: ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை, சர்வதேச பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயன்று வருவது குறித்தும், காஷ்மீரில் மனித உரிமைகள் தொடர்பாக சில வெளிநாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ள கருத்துகள் பற்றியும் ஜெய்சங்கரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு அவர் அளித்த பதில்:
காஷ்மீர் விவகாரத்தில், கடந்த 1972-ஆம் ஆண்டிலிருந்து நமது நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இந்த விவகாரத்தில், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று நாம் அதிகம் கவலைகொள்ளத் தேவையில்லை. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்களை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டுவிட்டது.

தற்காலிகமான அந்த சட்டப் பிரிவை, குறுகிய நோக்கம் கொண்ட சிலர் சுய லாபங்களுக்காக பயன்படுத்தி வந்தனர். இதன் மூலம் ஜம்மு-காஷ்மீரில் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தியதுடன், மக்களிடையே பிரிவினைவாத உணர்வுகளையும் தூண்டினர். இத்தகைய சூழலை சாதகமாக பயன்படுத்தி, எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவித்தது.

அந்த நாட்டுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றால், அது எல்லை தாண்டிய பயங்கரவாதம் தொடர்பாகவே இருக்கும். பாகிஸ்தானில் உருவாக்கப்பட்ட பயங்கரவாத கட்டமைப்பை முதலில் அவர்கள் ஒழிக்க வேண்டும். தனது அண்டை நாடு பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதை உலகில் எந்த நாடாவது ஏற்றுக் கொள்ளுமா? அந்த அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்களா? என்று ஜெய்சங்கர் கேள்வியெழுப்பினார்.
மேலும், பாகிஸ்தானிடமிருந்து சவால் நீடித்து வருவதாக குறிப்பிட்ட அவர், எல்லை தாண்டிய பயங்கரவாத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், இயல்பான அண்டை நாடாக பாகிஸ்தான் செயல்பட வேண்டும். அதுவரை சவால் நீடிக்கும் என்றார்.

முன்னேற்றப் பாதையில்...: இந்தியா, அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்னை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, ஜெய்சங்கர் அளித்த பதில் வருமாறு:
இந்தியா-அமெரிக்கா இடையிலான நல்லுறவு, அந்நாட்டின் முன்னாள் அதிபர்கள் ஜார்ஜ் புஷ், ஒபாமா, இப்போதைய அதிபர் டிரம்ப் என பல்வேறு நிர்வாகங்களின்கீழ் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் பயணித்து வருகிறது. இருதரப்பு தொடர்புகள் ஆரோக்கியமாக உள்ளன. இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தகப் பிரச்னை சாதாரணமானதுதான். உறவுகள் அதிகரிக்கும் போது, பிரச்னைகள் வருவது இயல்பானது. பிரச்னைகளே இல்லாமல், வர்த்தகம் மேற்கொள்ள இயலாது என்றார் அவர்.
பிரதமர் நரேந்திர மோடி, வரும் 22-ஆம் தேதி தொடங்கி அமெரிக்காவில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். ஹூஸ்டனில் இந்திய-அமெரிக்கர்கள் பங்கேற்கும் மோடி நலமா நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப்பும் கலந்துகொள்ளவிருக்கிறார். இது, இந்திய-அமெரிக்கர்களின் பங்களிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.
கிழக்கு லடாக்கின் பாங்காங் டசோ ஏரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே கடந்த புதன்கிழமை மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜெய்சங்கர், இரு நாடுகளின் ராணுவத்தினருக்கு இடையே வாக்குவாதமே ஏற்பட்டது; சண்டை அல்ல. இந்த விவகாரத்துக்கு, இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு காணப்பட்டது என்றார்.

மலேசியப் பிரதமர் கருத்துக்கு மறுப்பு
மலேசியாவில் தஞ்சமடைந் துள்ள இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கை நாடு கடத்த பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கோரிக்கை விடுக்கவில்லை என்று அந்நாட்டுப் பிரதமர் மகாதிர் முகமது தெரிவித்த கருத்துக்கு ஜெய்சங்கர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஜாகிர் நாயக்கை நாடு கடத்திக் கொண்டு வருவதற்கு, இந்தியா தொடர்ந்து தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜனவரியில் அவரை நாடு கடத்துவதற்கான கோரிக்கையை இந்திய அரசு விடுவித்தது. அவர் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com