
பாஜக மற்றும் பஜ்ரங் தளம் ஆகிய கட்சிகள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங்குக்கு எதிராக தில்லி நீதிமன்றத்தில் புதன்கிழமை அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பாஜகவும், ஹிந்து அமைப்பான பஜ்ரங் தளமும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து பணம் வாங்குவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான திக்விஜய் சிங், மத்தியப் பிரதேச மாநிலம், பிண்ட் நகரில் கடந்த மாதம் 31-ஆம் தேதி செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
அவரது இந்தக் கருத்து பாஜக மீது அவதூறு பரப்பும் நோக்கில் இருப்பதாகக் கூறி, தில்லி பெருநகர நீதிமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர் ராஜேஷ் குமார் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் இருந்து பாஜக பணம் பெறுவதாக திக்விஜய் சிங் தெரிவித்தார். அவர் கூறியதை நிரூபிக்கும் எவ்வித ஆதாரங்களையும் அவர் காட்டவில்லை. எங்கள் கட்சி மற்றும் கட்சித் தலைவர்களை அவமானப்படுத்தும் நோக்கில் இத்தகைய கருத்துகளை அவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர், இவ்வாறு பொறுப்பற்ற முறையில் கருத்துகளைத் தெரிவிக்கக் கூடாது.
இதற்கு முன்னரும், பலமுறை ஆதாரம் இல்லாமல் பல சர்ச்சைக் கருத்துகளை அவர் கூறியுள்ளார். மற்றவர்கள் மீது அவதூறு பரப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். எவ்வித ஆதாரமும் இல்லாமல் பாஜக மற்றும் பஜ்ரங் தளம் மீது குற்றம்சுமத்தியதற்காக அவருக்கு நீதிமன்றம் சம்மன் அளிக்க வேண்டும். தேவையில்லாமல் அவதூறு பரப்புவதற்காக அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு தில்லி பெருநகர நீதிமன்றத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிப்பது தொடர்பான முடிவு அக்டோபர் 9-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.