இந்தியாவுக்கு ஏற்றுமதிச் சலுகை: டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

இந்தியாவுக்கு ஏற்றுமதிச் சலுகை: டிரம்புக்கு அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தல்

அமெரிக்காவின் ஏற்றுமதி முன்னுரிமை அளிக்கப்படும் நாடுகள் பட்டியலில் (ஜிஎஸ்பி) இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்பிடம், அமெரிக்க எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளனர். 


அமெரிக்காவின் ஏற்றுமதி முன்னுரிமை அளிக்கப்படும் நாடுகள் பட்டியலில் (ஜிஎஸ்பி) இந்தியாவை மீண்டும் சேர்க்க வேண்டும் என அதிபர் டொனால்டு டிரம்பிடம், அமெரிக்க எம்.பி.க்கள் 44 பேர் வலியுறுத்தியுள்ளனர். 
அமெரிக்காவின் இந்தப் பட்டியலில் இடம்பெறும் நாடுகள், தங்களது உற்பத்திப் பொருள்களை சுங்க வரி இல்லாமலேயே அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் சலுகையைஏஈ பெறுகின்றன.  தற்போதைய நிலையில் 129 நாடுகள் அமெரிக்காவின் அந்த முன்னுரிமைப் பட்டியலில் உள்ளன. அந்த நாடுகள் வரிச் சலுகையுடன் சுமார் 4,800 பொருள்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கின்றன.  அந்தப் பட்டியலில் இருந்த இந்தியா, கடந்த ஜூன் மாதம் டிரம்ப் நிர்வாகத்தால் அதிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், இந்தியாவை மீண்டும் அந்தப் பட்டியலில் சேர்க்கக் கோரி, ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் 26 பேர், குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் 18 பேர் கூட்டாக வலியுறுத்தியுள்ளனர். 
இதுதொடர்பாக, ஜனநாயகக் கட்சி எம்.பி. ஜிம் ஹைம்ஸ், குடியரசுக் கட்சி எம்.பி. ரான் எஸ்டஸ் ஆகியோர் தலைமையில் இருகட்சிகளின் எம்.பி.க்களும் கையெழுத்திட்ட கடிதம், அமெரிக்க அரசின் வர்த்தகப் பிரதிநிதியான ராபர்ட் லைட்ஹைஸருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
இதனிடையே, ஜிஎஸ்பிக்கான கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் டேன் ஆண்டனி கூறியதாவது: ஏற்றுமதிச் சலுகை நாடுகளின் பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்கா-இந்தியா இடையேயான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. 
ஜிஎஸ்பி பட்டியலில் இருந்து இந்தியா நீக்கப்பட்டுள்ளபோதிலும், அந்தப் பட்டியலின் கீழ் கடந்த ஜூன்/ஜூலை காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 40 சதவீதம் அதிகமாகவே உள்ளது. 
இதனால், இந்திய ஏற்றுமதியாளர்கள் லாபமடைகின்றனர். ஆனால், அமெரிக்க நிறுவனங்கள் புதிய வரி வீதத்தின் கீழ் தினமும் ரூ.7.11 கோடி செலுத்த வேண்டிய இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளன என்று டேன் ஆண்டனி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com