எல்லைப் பகுதிகளின் வரலாற்றை எழுதுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல்

நாட்டிலேயே முதல் முறையாக, அரசு சார்பில் நாட்டின் எல்லைப் பகுதிகள் குறித்த வரலாற்றை எழுதுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


நாட்டிலேயே முதல் முறையாக, அரசு சார்பில் நாட்டின் எல்லைப் பகுதிகள் குறித்த வரலாற்றை எழுதுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
நாட்டின் எல்லைப் பகுதிகள் குறித்த வரலாற்றை எழுதுவது குறித்து விவாதிப்பதற்காக, தில்லியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில், நேரு நினைவு அருங்காட்சியகம், இந்திய ஆவண காப்பக இயக்குநரகம், உள்துறை அமைச்சகம், வெளியுறவுத் துறை அமைச்சகம், பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஆகியவற்றின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், எல்லைப் பகுதிகள் குறித்து பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் சரியான புரிதல் வேண்டுமெனில், அதுதொடர்பாக வரலாறு எழுதப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார். கூட்டத்தின் முடிவில் எல்லைப் பகுதிகள் குறித்த வரலாற்றை எழுதுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரலாறு எழுதும் பணி இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் எல்லைகளைக் கண்டறிதல், அவற்றை மாற்றியமைத்தல், எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பதில் பாதுகாப்புப் படையினர், எல்லையில் வசிக்கும் மக்கள் ஆகியோரின் பங்கு, எல்லையோர மக்களின் கலாசாரம், சமூக-பொருளாதாரச் சூழல் ஆகிய அம்சங்கள் அந்த வரலாற்றில் இடம்பெறும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com