கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்


கழிவுநீர்த் தொட்டிகளை மனிதர்கள் சுத்தம் செய்யும் நடைமுறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தீண்டாமை முறையும், ஜாதி முறையும் முற்றிலும் ஒழிக்கப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் குற்றம்சாட்டியது.
தாழ்த்தப்பட்டோர் (எஸ்.சி.) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.டி.) எதிரான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்படும் நபர்களை விசாரணையின்றி கைது செய்வதற்குத் தடை விதித்தும், கைதாகும் நபர்கள் ஜாமீன் பெறும் வகையிலும் சட்டத்தின் விதிகளைத் திருத்தி உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது.  இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர். ஷா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது. அப்போது, கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணிகளில் மனிதர்கள் ஈடுபடுவதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட போதிலும், ஜாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்படவில்லை. நச்சு வாயுக்கள் நிறைந்துள்ள கழிவுநீர்த் தொட்டிக்குள் மனிதர்களை அனுப்பி கொல்லும் நடைமுறை உலகில் எந்த நாட்டிலும் காணப்படவில்லை. இந்த நடைமுறையால், மாதந்தோறும் நான்கு முதல் ஐந்து பேர் இறக்கின்றனர். 
மக்கள் அனைவரும் சமம் என அரசமைப்புச் சட்டம் தெரிவித்துள்ளது. ஆனால், மக்களுக்கு உரிய உரிமைகளை அதிகாரிகள் ஏற்படுத்தித் தர மறுக்கின்றனர். கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு உரிய தற்காப்பு சாதனங்கள் வழங்கப்படுவதில்லை. சக மனிதர்களை இவ்வாறான செயல்களில் ஈடுபடுத்துவது முற்றிலும் மனிதத் தன்மையற்ற நடவடிக்கையாகும். அவர்களுக்கு பிராணவாயு அடங்கிய உருளையும், நச்சு வாயுக்களிலிருந்து தப்பிக்கும் வகையிலான முகமூடிகளும் ஏன் வழங்கப்படுவதில்லை? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
சட்டம் ஏதுமில்லை: இதற்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் பதிலளிக்கையில், கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்துபவர்களைத் தண்டிக்க எந்தச் சட்டமும் இல்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கும் அதிகாரம் வழங்கப்படவில்லை. கழிவுநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்வோர் மீது இதற்காக வழக்குப் பதிவு செய்ய முடியாது. அவர்களை அந்தப் பணியில் ஈடுபடுத்தும் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், நாட்டில் தீண்டாமை முறையும் இன்னமும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டதாக அரசமைப்புச் சட்டத்தில் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. சுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம் எந்தப் பாகுபாடுமின்றி உங்களால் (கே.கே. வேணுகோபால்) கைகுலுக்க முடியுமா? கண்டிப்பாக நீங்கள் அதைச் செய்ய மாட்டீர்கள். இந்த நிலையில்தான் நமது சமூகம் உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com