நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு பரிசீலனை: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்

மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்களுடன் கூடிய புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவி
நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டடம் கட்ட மத்திய அரசு பரிசீலனை: அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தகவல்


மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்களுடன் கூடிய புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை முதல், இந்தியா கேட் பகுதி வரையிலான சுமார் 3.5 கிலோ மீட்டர் நீளமுள்ள பகுதியில் நாடாளுமன்றக் கட்டடம், மத்திய அரசு அமைச்சகங்களின் அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசுக் கட்டடங்கள் அமைந்துள்ளன.
அவற்றை மீண்டும் புதிதாகக் கட்டுவதா அல்லது அவற்றில் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்வதா என்பது தொடர்பான பரிந்துரைகளை மத்திய அரசு பல்வேறு தரப்பினரிடம் கோரியிருந்தது.
இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் ஹர்தீப் சிங் புரி இதுதொடர்பாக பேசியதாவது:
புகழ்பெற்ற கட்டுமான நிறுவனம் ஒன்று, நாடாளுமன்றத்தை மத்திய அரசு அழிக்கப்போகிறது என்று கூறி எனக்கு கடிதம் அனுப்பியிருந்தது. மத்திய அரசு நாடாளுமன்றக் கட்டடத்தை அழிக்கப்போகிறது என்று யார் கூறியது? இந்தியாவை பிரிட்டீஷார் 190 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்தனர். 
நாட்டில் பல அழகான கட்டடங்களையும் கட்டினர். அவை தற்போது நாட்டின் பாரம்பரியமாகிவிட்டது. நாடாளுமன்ற கட்டடத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதி அருங்காட்சியமாக்கப்பட வேண்டும். நாடாளுமன்றக் கட்டடத்துக்கு ஒன்றும் ஆகாது. 
அந்தக் கட்டடத்தை ஒட்டி, புதிய நாடாளுமன்ற கட்டடத்தை கட்டுவது தொடர்பாக பரிசீலித்து வருகிறோம். இந்த இரண்டு கட்டடங்களையும் சுரங்கப் பாதை வழியாக இணைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் இறுதி மாதிரி வடிவமைப்பை கட்டுமான நிறுவனங்கள் மத்திய அரசிடம் சமர்ப்பித்த பிறகே இதுதொடர்பாக முடிவு செய்யப்படும் என்றார் ஹர்தீப் சிங் புரி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com