பிரதமர் மோடியின் விமானம் பாக். வான்வெளியில் செல்ல அனுமதி மறுப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது, அவரது விமானம் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது.
பிரதமர் மோடியின் விமானம் பாக். வான்வெளியில் செல்ல அனுமதி மறுப்பு


பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின்போது, அவரது விமானம் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது.
அமெரிக்காவில் ஐ.நா. பொதுச் சபையின் 74-ஆவது ஆண்டுக் கூட்டத்தின் பொது விவாதம் வரும் 24ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி உரையாற்றவிருக்கிறார். இதையொட்டி, அமெரிக்காவில் வரும் 21ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை அவர் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். 
இந்நிலையில், பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறப்பதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அந்த நாட்டிடம் இந்தியா முறைப்படி கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்துள்ளது.
இதுதொடர்பாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி புதன்கிழமை வெளியிட்ட விடியோ அறிக்கையில், பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் வரும் 21-ஆம் தேதியும், 28-ஆம் தேதியும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவு, இஸ்லாமாபாதில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். 
முன்னதாக, பிரதமர் மோடியின் விமானத்துக்கு பாகிஸ்தான் அனுமதி மறுக்கும் பட்சத்தில், இந்த விவகாரத்தை சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பிடம் இந்தியா எடுத்துச் செல்லும்; இதன் மூலம் பாகிஸ்தானுக்கு அந்த அமைப்பு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன. அதன்படி, இந்த விவகாரம் சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பிடம் கொண்டு செல்லப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அண்மையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஐஸ்லாந்துக்கு பயணம் மேற்கொண்டபோது, அவரது விமானம் தங்களது வான்வெளியைப் பயன்படுத்த பாகிஸ்தான் அனுமதி மறுத்துவிட்டது. இரு நாடுகளுக்கும் இடையே தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அற்பமானது என்று இந்தியா விமர்சித்தது.
பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் கிர்கிஸ்தான் பயணம் மேற்கொண்டபோது அவரது விமானம் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்தாமல், வேறு வழியாக அவரது விமானம் சென்றது.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை மத்திய அரசு அண்மையில் ரத்து செய்தது. அத்துடன், அந்த மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும் நடவடிக்கை மேற்கொண்டது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முயன்று வருகிறார். ஆனால், ஜம்மு-காஷ்மீர் தொடர்பான நடவடிக்கைகள், இந்தியாவின் உள்விவகாரம்; அதில் அந்நிய தலையீட்டை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
இந்தச் சூழலில், அவரது விமானம் தங்களது நாட்டின் வான்வெளியில் பறக்க பாகிஸ்தான் அனுமதி மறுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com