பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு: மேற்கு வங்கத்தின் பெயர் மாற்றம் குறித்து பேச்சு

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை  சந்தித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை புதன்கிழமை  சந்தித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.


தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி புதன்கிழமை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் மாற்றம் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்கு வங்கம் என்ற பெயரை பங்களா என ஆங்கிலம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மூன்று மொழிகளிலும் மாற்ற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்தப் பெயர் மாற்றத்துக்காக, அந்த மாநில சட்டப் பேரவையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தீர்மானம் நிறைவேற்றியது. எனினும், இந்தப் பெயர் மாற்றத்துக்கு மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. 
இந்நிலையில், தில்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில் மோடியை மம்தா புதன்கிழமை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சுட்டுரையில் பிரதமர் அலுவலகம் பதிவேற்றம் செய்திருந்தது.

தில்லியில் பிரதமரைச் சந்தித்தது தொடர்பாக செய்தியாளர்களிடம் மம்தா கூறியதாவது:
பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் பயனளிக்கும் வகையில் அமைந்தது. மேற்கு வங்கத்தின் சில முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதித்தோம். மாநிலத்துக்கு வழங்க வேண்டிய மானியம் மற்றும் நிலுவையில் உள்ள நிதியுதவியை உடனடியாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டேன். 

மாநிலத்தின் பெயரை பங்களா என்று மாற்றுவதுதான் எங்களுடைய பிரதான திட்டம் என்று பிரதமரிடம் தெரிவித்தேன். அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக பிரதமர் உறுதியளித்தார். மாநிலத்தில் நடைபெறவுள்ள துர்கா பூஜையில் பங்கேற்குமாறு அவருக்கு அழைப்பு விடுத்துள்ளேன் என்று கூறினார்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) குறித்த கேள்விக்கு, அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே என்ஆர்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், அதற்கும் மேற்கு வங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேற்கு வங்கத்தில் என்ஆர்சி கணக்கெடுப்பை அமல்படுத்துவதற்கான திட்டம் இல்லை என்றார் மம்தா.
இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடியை மம்தா கடுமையாக விமர்சித்தார். தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமராக நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்ற நிகழ்ச்சியில்கூட மம்தா கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்ததாக மம்தா தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், முதல்வர் மம்தா பானர்ஜி இப்போதுதான் நல்லறிவுடன் செயல்பட்டுள்ளார். பிரதமரை அவர் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனினும், அவரது இந்த முயற்சி மிகவும் தாமதமானது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com