ஹிந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்பது ஆபத்தான போக்கு: ப.சிதம்பரம்

ஹிந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்பது ஆபத்தான போக்கு என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
ஹிந்தி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்பது ஆபத்தான போக்கு: ப.சிதம்பரம்


ஹிந்தி மொழி மட்டுமே இந்தியாவை ஒருங்கிணைக்கும் என்பது ஆபத்தான போக்கு என்று முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
நாட்டில் பெரும்பான்மையான மக்களால் பேசப்படும் ஹிந்தி மொழியால் ஒட்டுமொத்த நாட்டையும் ஒருங்கிணைக்க முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் பேசியிருந்தார். இதற்கு எதிர்க்கட்சியினர் உள்பட, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம், அவரது குடும்பத்தினர் மூலம் தனது சுட்டுரைப் பக்கத்தில் இந்த விவகாரம் தொடர்பாக புதன்கிழமை கருத்து தெரிவித்திருந்தார். 
அதில், ஹிந்தி மொழி மட்டுமே நாட்டை ஒருங்கிணைக்கும் என்பது போன்ற பேச்சு தற்போது நாட்டில் எழுந்துள்ளது, ஆபத்தான போக்காகும். இது ஏற்புடையதல்ல. தமிழ் மக்களும், அவர்கள் போன்று பிற மொழி பேசும் மக்களும் ஹிந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டார்கள். 
நாட்டிலுள்ள அனைத்து மொழிகளுமே மேம்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆதரிப்போமே, ஹிந்தி மொழி மட்டும் நாட்டை ஒருமைப்படுத்தும் என்ற கருத்தை எப்போதும் ஏற்க மாட்டோம் என்று ப.சிதம்பரம் தெரிவித்திருந்தார். 
மேலும், ஹிந்தி திணிப்புக்கு எதிராக திமுக சார்பில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்களை பங்கேற்கச் செய்யுமாறு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியை அவர் வலியுறுத்தியுள்ளார். 
கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது: இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 
சமீப காலங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து வரும், ஒரே தேசம்; ஒரே மொழி, ஒரே தேசம்; ஒரே தேர்தல் போன்ற கருத்துகள் இந்திய ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சித் தத்துவத்துக்கும் எதிரானதாகும். அத்துடன், இந்திய அரசமைப்புச் சட்ட விதிகளுக்கும் அது எதிரானது. மத்திய உள்துறை அமைச்சர் மக்களின் மனதில் இதுபோன்ற எண்ணங்களை விதைப்பது கூட்டாட்சிக் கொள்கைக்கு எதிரானதாகும். எனவே, அமித் ஷா தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும். 
அதேபோல், நாட்டில் பல கட்சி ஜனநாயக முறை தோற்றுவிட்டதாகவும் அமித் ஷா கூறியுள்ளார். உண்மையில் நம் நாட்டில் இருக்கும் பல கட்சி ஜனநாயகம்தான் தேசத்தின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் அப்படியே வைத்திருப்பதுடன், ஜனநாயகத்தையும் துடிப்புடன் வைத்துள்ளது. 
நம் நாட்டு ஜனநாயகத்தின் ஸ்திரத்தன்மையானது, மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டதாகும் என்று வீரப்ப மொய்லி அதில் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com