400 மாவட்டங்களில் லோன் மேளா: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கும் வகையில் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 400 மாவட்டங்களில் லோன் மேளா நடத்துமாறு பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் இணை அமைச்சர் அனுராக் தாக்குர்.
புதுதில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். உடன் இணை அமைச்சர் அனுராக் தாக்குர்.


சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடனுதவி அளிக்கும் வகையில் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் 400 மாவட்டங்களில் லோன் மேளா நடத்துமாறு பொதுத் துறை வங்கிகளை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நாட்டில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையிலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையிலும் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பொதுத் துறை வங்கிகளின் தலைவர்களுடன் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார். அப்போது நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிப்பது, பொருளாதாரச் செயல்பாடுகளை ஊக்குவிப்பது தொடர்பாக ஆலோசித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்துப் பிறகு செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
பண்டிகைக் காலம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, பொதுத் துறை வங்கிகள் நாட்டின் 400 மாவட்டங்களில் லோன் மேளாக்களை நடத்தவுள்ளன. இதில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வர்த்தகர்கள் மற்றும் வேளாண் துறையினருக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன் அளிக்கப்படும். இதன் மூலம் நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். அதனால் மக்களின் வாங்கும் திறனும் உயரும்; பொருளாதாரச் செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும்.

இப்போது நெருக்கடியில் உள்ள சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை, வாராக் கடனாகப் பார்க்க வேண்டாம். அவற்றை திரும்பப் பெறும் வகையில் ஊக்கமளிக்க வேண்டும். குறுகிய கால கடன் பாக்கிகளை 2020 மார்ச் 31-ஆம் தேதி வரை வாராக்கடன்களாக அறிவிக்க வேண்டாம் என்று பொதுத்துறை வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல சிறு தொழில் நிறுவனங்கள், வங்கிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி ஒட்டுமொத்தமாக ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் கடனைத் தீர்த்துக் கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. சம்பந்தப்பட்ட வங்கி விதிகளுக்கு உள்பட்டு அவை ஏற்றுக் கொள்ளப்படும்.

சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடந்த 2017-18-இல் ரூ.1.81 லட்சம் கோடியும், 2018-19-இல் ரூ.11.83 லட்சம் கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வங்கி ஊழியர் சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அவர்களது பிரச்னைகளை கேட்டறிந்து மத்திய அரசு தீர்த்து வைக்கும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com