மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!

2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகி, தற்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலரும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர்.
மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்ட பிறகும் பங்களாவை காலி செய்யாத முன்னாள் எம்.பி.க்கள்!


2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.க்கள் ஆகி, தற்போது தேர்தலில் போட்டியிடாத முன்னாள் எம்.பி.க்கள் பலரும் தங்களுக்கு அரசு ஒதுக்கிய பங்களாக்களை காலி செய்யாமல் தாமதம் செய்து வருகின்றனர்.

மக்களவை கலைக்கப்பட்டு ஒரு மாதத்துக்குள், அனைத்து முன்னாள் எம்.பி.க்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசு பங்களாக்களை காலி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால்?

கடந்த மே 25ம் தேதி இந்தியாவின் 16வது மக்களவையைக் கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு வெளியிட்டார். 

ஆனால், 4 மாதங்கள் ஆகியும், பல எம்.பி.க்கள் தற்போது வரை பங்களாவை காலி செய்யவில்லை. இதனால், தற்போது புதிதாக தேர்வான எம்.பி.க்களுக்கு பங்களாவை ஒதுக்குவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, மத்திய இணை அமைச்சர் ஜி.கே. ரெட்டிக்கு ஏற்கனவே ஒரு பங்களா ஒதுக்கப்பட்டது. ஆனால், அங்கு தங்கியிருந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா வீட்டை காலி செய்யாததால், ஜிகே ரெட்டிக்கு புதிய பங்களா ஒதுக்கப்பட்டது.

அசோகா சாலையில் உள்ள புதிய பங்களாவில் இருக்கும் ராதா மோகன் சிங் வீட்டை காலி செய்ய மேலும் கால அவகாசம் கேட்டிருப்பதால், ஜிகே ரெட்டி தற்போது அந்திரா பவனில் தங்கியிருந்துதான் நாடாளுமன்ற அலுவல்களை கவனித்து வருகிறார்.

கடந்த மாதமே, முன்னாள் எம்பிக்கள் பங்களாவை காலி செய்ய மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து உத்தரவுகளையும் பிறப்பித்தது. 7 நாட்களுக்குள் வீட்டை காலி செய்யுமாறு உத்தரவிட்ட மத்திய அரசு, அதுபோன்ற வீடுகளுக்கு தண்ணீர் மற்றும் மின்சார சேவையையும் துண்டித்தது.

மின்சாரம் மற்றும் தண்ணீர் சேவை துண்டிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் பங்களாக்களை காலி செய்யாமல் அடம் பிடிக்கும் முன்னாள் எம்.பி.க்களால், புதிய எம்.பி.க்களுக்கு வீடுகளை ஒதுக்குவதில் சிக்கல் எழுகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களவை கலைக்கப்படும் போதெல்லாம் இந்த பிரச்னை ஏற்பட்டு வருகிறது. அரசு பங்களாக்களில் உரிய காலத்துக்குப் பிறகும் தங்கியிருக்கும் முன்னாள் எம்.பி.க்களிடம் உரிய வாடகை வசூலிப்பது அல்லது அபராதம் வசூலிப்பது போன்ற அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே மத்திய அரசு இதற்கு தீர்வு காண முடியும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com