கர்தார்பூர் வழித்தட கட்டுமானப் பணிகள்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஆய்வு

சீக்கிய யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகளை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் கர்தார்பூர் வழித்தடம் தொடர்பான ஆய்வை வியாழக்கிழமை மேற்கொண்ட முதல்வர் அமரீந்தர் சிங்.
பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் கர்தார்பூர் வழித்தடம் தொடர்பான ஆய்வை வியாழக்கிழமை மேற்கொண்ட முதல்வர் அமரீந்தர் சிங்.


சீக்கிய யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டு வரும் கர்தார்பூர் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகளை பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார்.
சீக்கிய மதத்தை நிறுவியவரும் அதன் முதல் குருவுமான குருநானக்கின் பிறந்த தினத்தையொட்டி, இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் சீக்கிய யாத்ரீகர்கள் பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள நன்கானா சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
இந்த யாத்திரை மேற்கொள்வதற்கு எளிதாக இருக்கும் வகையில், பஞ்சாபின் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாஹிப் குருத்வாரா வரை சாலை வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டது. இச்சாலை வழியாகச் செல்லும் யாத்ரீகர்கள் விசா இல்லாமல் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். 
இதில், குருதாஸ்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை இந்தியாவும், மறுபுறம் கர்தார்பூரிலிருந்து எல்லைப் பகுதி வரையிலான வழித்தடத்தை பாகிஸ்தானும் அமைத்து வருகின்றன. குருநானக்கின் 550-ஆவது பிறந்த தினம், வரும் நவம்பரில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, இந்த வழித்தடம் வரும் நவம்பர் மாதம் 9-ஆம் தேதி திறக்கப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்தது.
இந்நிலையில், இந்தியப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் வழித்தடத்தின் கட்டுமானப் பணிகளை அமரீந்தர் சிங் வியாழக்கிழமை பார்வையிட்டார். கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிய பின்னர், சாலை விரிவாக்கம் மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ. 75 கோடியும், கலாசார சின்னங்கள் மற்றும் உணவகங்கள் அமைப்பதற்காக ரூ. 3 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்தார். திட்டமிட்ட தேதிக்குள் அனைத்துப் பணிகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.
முன்னதாக, இந்த மாதத் தொடக்கத்தில், கர்தார்பூர் வழித்தடத் திட்டம் தொடர்பாக இந்தியா-பாகிஸ்தான் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கர்தார்பூர் வழித்தடம் வழியாக வரும் பக்தர்களிடம் சுமார் ரூ. 1,430 சேவைக் கட்டணம் வசூலிப்பதாக பாகிஸ்தான் பரிந்துரைத்திருந்தது. 
இதுதொடர்பாக அமரீந்தர் சிங்கிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் கூறுகையில், கர்தார்பூர் வழித்தடம் வழியாக வரும் சீக்கிய பக்தர்களுக்கு பாகிஸ்தான் சேவைக் கட்டணம் விதிக்க நினைப்பது, ஜஸியா வரியைப் போன்றது. முகலாய மன்னர்கள் காலத்தில் முஸ்லிம் அல்லாதோர் புனித யாத்திரை மேற்கொள்வதற்கு ஜஸியா வரி வசூலிக்கப்பட்டது. இந்த வரி, மிகவும் மோசமானது என்று கருதி, அதை மாமன்னர் அக்பர் ரத்து செய்தார். கடவுளைக் காண இலவசமாக செல்ல வேண்டும் என்ற சீக்கியக் கொள்கைக்கு இது எதிராக உள்ளது. இந்தப் பரிந்துரையை பாகிஸ்தான் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com