ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவல் அக்.3 வரை நீட்டிப்பு: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர சிதம்பரம்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததையடுத்து, தில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு வியாழக்கிழமை அழைத்து வரப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர சிதம்பரம்.


ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை அக்டோபர் 3-ஆம் தேதி வரை தில்லி சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
ப.சிதம்பரத்தின் 14 நாள் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து, தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, சிபிஐ தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த வழக்கில் ப.சிதம்பரம் சிறைக்கு அனுப்பப்பட்ட நாளில் இருந்து எந்த மாற்றமும் ஏற்படவில்லை. எனவே, அவரது நீதிமன்றக் காவலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
ஆனால் சிபிஐ தரப்பு கோரிக்கைக்கு ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கூறியதாவது:
ப.சிதம்பரம், இதயக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம், தாழ்சர்க்கரை உள்ளிட்ட தொந்தரவுகளால் அவதிப்பட்டு வருகிறார். 
கடந்த 5-ஆம் தேதி முதல் நீதிமன்றக் காவலில் இருக்கும் அவரது எடை மிகவும் குறைந்து விட்டது. அவருக்கு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முறையான பரிசோதனை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும். 
மேலும், அவர் இருக்கும் சிறை அறையில் இருந்த நாற்காலி எடுக்கப்பட்டு விட்டது. அவருக்கு தலையணையும் வழங்கப்படவில்லை என்று அவர்கள் கூறினர்.
அதற்கு, சிறையில் உள்ள ஒவ்வொருவரின் நலமும் முக்கியமானதுதான். சட்டத்துக்கு உள்பட்டு அவருக்கு மருத்துவ வசதிகளை சிறை நிர்வாகம் அளிக்கும் என்று துஷார் மேத்தா பதிலளித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் குமார் குஹர், ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை, வரும் அக்டோபர் 3-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், சிதம்பரத்துக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்வதற்கும் நீதிபதி அனுமதி அளித்தார்.
முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் காலத்தில் ப.சிதம்பரம், மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதற்கு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 
அந்த நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 
இதுதொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த சிபிஐ, ப.சிதம்பரத்தை கடந்த மாதம் கைது செய்தது. பின்னர், சிபிஐ காவலில் விசாரிக்கப்பட்ட அவர், 14 நாள் நீதிமன்றக் காவலில், கடந்த 5-ஆம் தேதி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com