ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி கோரி மேற்கு வங்க நீதிமன்றத்தை அணுகியது சிபிஐ

ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி கோரி மேற்கு வங்க நீதிமன்றத்தை அணுகியது சிபிஐ

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி கோரி மேற்கு வங்கத்தின் அலிப்பூர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.


சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாரை கைது செய்ய அனுமதி கோரி மேற்கு வங்கத்தின் அலிப்பூர் நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
சாரதா நிதி நிறுவன மோசடி குறித்து மேற்கு வங்க அரசு நியமித்த சிறப்பு விசாரணைக் குழு முதலில் விசாரித்து வந்தது. அந்தக் குழுவில் இருந்த ராஜீவ்குமார், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தபோது முக்கிய ஆதாரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாகவும், சாரதா நிதி நிறுவன மோசடி குறித்தும் சிபிஐ இப்போது விசாரித்து வருகிறது.  இந்நிலையில், இந்த வழக்கில், ராஜீவ்குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, வழக்கு விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு இருமுறை சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை. அதையடுத்து, ராஜீவ்குமாரின் இருப்பிடத்தை கண்டறிவதற்காக சிபிஐ சார்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. அவரின் இருப்பிடத்தைக் கண்டறிய சிபிஐ தீவிரமாக முயற்சி செய்து வருகிறது. 
இந்நிலையில், அவரைக் கைது செய்ய அனுமதி கோரி அலிப்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்காக, ராஜீவ்குமாருக்கு  பலமுறை அழைப்பாணை அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அதனால் அவரை கைது செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி சுப்ரதா முகர்ஜி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ்குமார் தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில், நிதி நிறுவன மோசடி வழக்கில் ராஜீவ் குமார் குற்றவாளி இல்லை. அவர் சாட்சிதான். அதனால் அவரை கைது செய்ய அனுமதியளிக்கக் கூடாது என்றார். 
இதனிடையே, மேற்கு வங்கத்தின் பல்வேறு இடங்களுக்கு ராஜீவ் குமாரை தேடி சிபிஐ அதிகாரிகள் சென்றனர். அலிப்பூரில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் விடுதி, நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர விடுதி உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனையிட்டனர். அதையடுத்து வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 20) காலை 11 மணிக்கு சிபிஐ முன் ஆஜராகுமாறு ராஜீவ்குமாருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது.
முன்னதாக, சிபிஐ முன் ஆஜராகுமாறு ராஜீவ்குமாருக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாநில தலைமைச் செயலருக்கும், காவல் துறை டிஜிபிக்கும் சிபிஐ கடிதம் அனுப்பியது. இதுதொடர்பாக தலைமைச் செயலகத்துக்கு சிபிஐ அதிகாரிகள் நேரில் சென்றும் வலியுறுத்தினர். அப்போது, செப்டம்பர் 9 முதல் வரும் 25-ஆம் தேதி வரை ராஜீவ்குமார் விடுமுறையில் உள்ளதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ராஜீவ்குமாரை தொடர்பு கொள்ளும் வகையில், அவரது செல்லிடப்பேசி மற்றும் தொலைபேசி எண் விவரங்களை அளிக்குமாறு மேற்கு வங்க காவல் துறை தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com