பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயல்படுகிறது பாஜக அரசு: இடதுசாரி கட்சிகள் குற்றச்சாட்டு

விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு, பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக இடதுசாரி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடதுசாரி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா


விவசாயிகளைப் புறக்கணித்துவிட்டு, பெரு நிறுவனங்களுக்குச் சாதகமாக மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருவதாக இடதுசாரி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து விவாதிக்க இடதுசாரி கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, தில்லியில் வெள்ளிக்கிழமை கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக், புரட்சிகர சோஷலிஸ கட்சி ஆகியவற்றின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசியதாவது:
பிரதமர் மோடி தலைமையிலான அரசு, நாட்டிலுள்ள செல்வந்தர்களுக்கு ரூ.2.25 லட்சம் கோடி மதிப்பிலான சலுகைகளை  கடந்த சில மாதங்களில் அளித்துள்ளது. வேளாண்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பால் விவசாயிகள் தற்கொலை செய்துவரும் வேளையிலும்,  செல்வந்தர்களுக்கு ஆதரவாகவே மோடி அரசு செயல்பட்டு வருகிறது.
நாட்டின் பொருளாதாரம் சீரழிவுக்கு உள்ளாகியுள்ளது. மக்கள் பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். வேலையில்லாத் திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பை அளிக்க முடியாமல் தொழில்துறை திண்டாடி வருகிறது. பாதுகாப்புத் துறையிலும், தொலைத்தொடர்புத் துறையிலும் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது, நாட்டின் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுக்கும்.
பெரு நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிப்பதைத் தவிர்த்து, ஊரகப் பகுதிகளில் மத்திய அரசு முதலீடு செய்ய வேண்டும். அப்போதுதான், மக்களின் வாங்கும் திறன் அதிகரித்து, பொருளாதார வளர்ச்சி சீரடையும் என்றார் சீதாராம் யெச்சூரி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல், அரசியல்ரீதியான பிரச்னைகளில் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டை மூழ்கடித்து வருகின்றன. மக்களின் சேமிப்பை அதிகரிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும். அதுவே நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என்றார்.
கூட்டறிக்கை: அனைத்துக் கட்சிகளும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், மக்கள் நலத் திட்டங்களில் முதலீடு செய்து, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, வேலைவாய்ப்பில்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்குவது, தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச மாத வருமானத்தை ரூ.18,000 ஆக அதிகரிப்பது, பொதுத் துறை வங்கிகள் தனியார்மயமாவதைத் தடுப்பது, வேளாண்கடன்களைத் தள்ளுபடி செய்வது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் பொருளாதாரத்தை சீரடையச் செய்ய உதவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com