ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அவசியம்: ராஜ்நாத் சிங்

ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் பயிற்சி பெற வேண்டியது அவசியம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு பயிற்சி அவசியம்: ராஜ்நாத் சிங்


ரசாயனத் தாக்குதல்களை எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் பயிற்சி பெற வேண்டியது அவசியம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் நகரிலுள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டிஆர்டிஇ) விஞ்ஞானிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போதைய காலகட்டத்தில், மற்ற நாட்டு எதிரிகள் ரசாயனத் தாக்குதல்களை முன்னெடுக்கக் கூடும். வீரர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும் ரசாயன ஆயுதங்கள் பெருமளவில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை.

இதிலிருந்து தப்பிக்க ரசாயன ஆயுதங்களைக் கண்டறிவது குறித்தும், ரசாயனத் தாக்குதலிலிருந்து தப்பிப்பது குறித்தும் நமது பாதுகாப்புப் படையினர் உரிய பயிற்சி பெற வேண்டியது கட்டாயமாகும். நச்சுப் பொருள்களைக் கண்டறிவது, அவற்றிலிருந்து பாதுகாப்பது உள்ளிட்டவவை தொடர்பாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கண்டறிந்துள்ளது. 

கடந்த 45 ஆண்டுகளாக டிஆர்டிஇ விஞ்ஞானிகள் நாட்டுக்குப் பெரும் சேவையாற்றி வருவது சிறப்பானதாகும். நாட்டைப் பாதுகாப்பதில், பாதுகாப்புப் படையினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களுக்கு இணையாக, பாதுகாப்புத் துறையில் பணியாற்றி வரும் விஞ்ஞானிகளும் நாட்டைப் பாதுகாத்து வருகின்றனர். 

சர்வதேச ரசாயன ஆயுதங்கள் தடுப்பு அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே தேசிய ஆய்வகம், டிஆர்டிஇ என்பது கூடுதல் மகிழ்ச்சியளிக்கிறது. இதன் மூலம், உலகில் நடத்தப்பட்டு வரும் ரசாயனத் தாக்குதல்கள் குறித்தும், அதில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் ஆராய்ச்சி நடத்தும் வாய்ப்பு டிஆர்டிஇ அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்துள்ளது என்றார் ராஜ்நாத் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com