திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு அகில் குரேஷி பெயர் பரிந்துரை

திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு, நீதிபதி அகில் குரேஷியின் பெயரை, கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 
திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு அகில் குரேஷி பெயர் பரிந்துரை

திரிபுரா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவிக்கு, நீதிபதி அகில் குரேஷியின் பெயரை, கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 
இதன் மூலம், மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக குரேஷி நியமிக்கப்பட வேண்டும் என்ற கொலீஜியத்தின் முந்தைய முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு, மத்திய அரசுக்குக் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றஞ்சாட்டிய குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென கடந்த மாதம் 16-ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குரேஷியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி, அதனை மத்திய அரசு கடந்த மாதம் 28-ஆம் தேதி கொலீஜியம் அமைப்புக்குத் திருப்பியனுப்பியது.
இந்நிலையில், கொலீஜியம் அமைப்பு கடந்த 5-ஆம் தேதி இயற்றிய தீர்மானம் ஒன்று உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக, கடந்த மாதம் 23, 27 ஆகிய தேதிகளில் மத்திய அரசு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதங்கள் எழுதியது. அத்துடன் சில ஆவணங்களையும் மத்திய அரசு இணைத்திருந்தது. அந்தக் கடிதங்களையும், ஆவணங்களையும் கொலீஜியம் அமைப்பு ஆராய்ந்தது.
இதையடுத்து, கடந்த மே மாதம் 10-ஆம் தேதி இயற்றப்பட்ட தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய கொலீஜியம் அமைப்பு முடிவெடுத்தது. அதன்படி, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்குப் பதிலாக, திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அகில் குரேஷியை நியமிக்க கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்கிறது என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், மத்திய அரசின் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல்கள் குறித்து, அத்தீர்மானத்தில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com