மகாராஷ்டிரம், ஹரியாணா பேரவைகளுக்கு அக். 21-இல் தேர்தல்

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக். 24-இல் நடைபெறும்
புது தில்லியில் பேரவைத் தேர்தல் தேதிகளை சனிக்கிழமை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. உடன் தேர்தல் ஆணையர்கள்(இடமிருந்து) அசோக் லவாசா, சுஷீல் சந்திரா.
புது தில்லியில் பேரவைத் தேர்தல் தேதிகளை சனிக்கிழமை வெளியிட்ட தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா. உடன் தேர்தல் ஆணையர்கள்(இடமிருந்து) அசோக் லவாசா, சுஷீல் சந்திரா.

மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா சட்டப் பேரவைகளுக்கு ஒரே கட்டமாக வரும் அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை அக். 24-இல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் உள்ள 64 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் அக். 21-இல் இடைத் தேர்தல் நடைபெறும்.

மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவ.9-ஆம் தேதியும் ஹரியாணா சட்டப் பேரவையின் பதவிக்காலம் நவம்பர் 2-ஆம் தேதியும் முடிவடைகின்றன. இதையடுத்து இந்த மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகளை தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தில்லியில் சனிக்கிழமை அறிவித்தார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஹரியாணா, மகாராஷ்டிரம் ஆகிய இரு மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான அறிவிக்கை செப். 27-இல் வெளியிடப்படும். அதே நாளில் வேட்பு மனு தாக்கலும் தொடங்கும். வேட்பு மனுக்களை சமர்ப்பிக்க கடைசி நாள் அக். 4 ஆகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அக். 5-ஆம் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை அக். 7-இல் திரும்பப் பெறலாம். வாக்குப்பதிவு அக். 21-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக். 24-ஆம் தேதியும் நடைபெறும் என்று அரோரா தெரிவித்தார்.

அவரிடம் "ஒரே நேரத்தில் மக்களவைக்கும் மாநிலங்களுக்கும் தேர்தல் என்று விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஜார்க்கண்ட் சட்டப் பேரவைக்கு தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படாதது ஏன்?' என்று செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர் பதிலளிக்கையில் "ஜார்க்கண்ட் மாநில சட்டப் பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 9-ஆம் தேதிதான் முடிவடைகிறது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விவாதம் நடைபெற்றாலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகளுக்கு இடையே கருத்தொற்றுமை ஏற்படாத பட்சத்தில் தேர்தல் ஆணையமே முடிவெடுக்க முடியாது' என்று தெரிவித்தார். 

வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களைப் பயன்படுத்துவது குறித்து அவர் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் மேற்கொண்டது போல் ஹரியாணா மற்றும் மகாராஷ்டிரத்தில் உள்ள ஒவ்வொரு தொகுதியிலும் ஐந்து வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்க தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளது. 

சில தொழில்நுட்பக் காரணங்களால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கத் தவறினாலும், அந்த இயந்திரங்கள் தவறான வாக்கை எப்போதும் பதிவு செய்யாது. எந்தெந்த வாக்குச்சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்ப்பது என்பது வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு முடிவு செய்யப்படும்' என்று தெரிவித்தார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரான பிறகு நடைபெறும் முதல் சட்டப் பேரவைத் தேர்தல்கள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. 

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரம் பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் இடம்பெறும் முக்கிய அம்சமாக உள்ளது. 

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இரு மாநிலங்களிலும் ஆட்சியைத் தக்க வைக்க முடியும் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் கடந்த சில வாரங்களில் பாஜகவில் இணைந்துள்ளதால் அக்கட்சிகள் பலவீனமடைந்துள்ளதாக கருதப்படுகிறது.

18 மாநிலங்களில் 64 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல்

நாடு முழுவதும் 18 மாநிலங்களில் உள்ள 64 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும், பிகாரில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் வரும் அக். 21-ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறுகையில் "கர்நாடகத்தில் அண்மையில் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட காலியிடங்களுக்கும் இடைத் தேர்தல் நடைபெறும்' என்று தெரிவித்தார். அதன்படி கர்நாடகத்தில் 15 இடங்களுக்கும், உத்தரப் பிரதேசத்தில் 11 இடங்களுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அருணாசலப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மேகாலயம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு சட்டப் பேரவைத் தொகுதிக்கு அக். 21-இல் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. 

அஸ்ஸாமில் 4, பிகாரில் 5, குஜராத்தில் 4, ஹிமாசலப் பிரதேசத்தில் 2, கேரளத்தில் 5, பஞ்சாபில் 4, ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாட்டில் தலா 2, சிக்கிமில் 3 தொகுதிகளுக்கும், அதேபோல் பிகாரின் சமஸ்திப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும். சமஸ்திபூர் எம்.பி.யாக இருந்த லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வானின் சகோதரர் ராமச்சந்திர பாஸ்வான் கடந்த ஜூலையில் காலமானார். அதைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com