ஜார்க்கண்டில் அல்-காய்தா பயங்கரவாதி கைது

கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அல்-காய்தா பயங்கரவாதியை, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் அந்த மாநில காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
ஜாம்ஷெட்பூரில் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கலீமுதீன் முஜாஹிரி.
ஜாம்ஷெட்பூரில் பயங்கரவாதத் தடுப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட கலீமுதீன் முஜாஹிரி.

கடந்த 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அல்-காய்தா பயங்கரவாதியை, ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட்பூரில் அந்த மாநில காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, ஜார்க்கண்ட் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் முராரி லால் மீனா கூறியதாவது:
இந்திய துணைக் கண்டத்தில் செயல்படும் அல்-காய்தா பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் கலீமுதீன் முஜாஹிரி, ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடாநகர் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்புப் படை சிறப்புக் குழுவினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஜாம்ஷெட்பூர் நீதிமன்றத்தால் கடந்த 2016ஆம் ஆண்டில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்ட கலீமுதீன், காவல்துறையினரிடமிருந்து தப்புவதற்காக அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி வந்தார். இதையடுத்து, பயங்கரவாதத் தடுப்புப் படையின் சிறப்புக் குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், ஜாம்ஷெட்பூரின் ஆஸாத் நகரிலுள்ள தனது மதரஸாவுக்கு காலிமுத்தீன் வந்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், டாடா நகர் ரயில் நிலையம் அருகே அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், அங்கிருந்து ராஞ்சிக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கடந்த 3 ஆண்டுகளில் கலீமுதீனும், அவரது மகன் ஹுசைஃபாவும் வங்கதேசம், நேபாளம், சவூதி அரேபியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சென்று வந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத், மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களை மூளைச்சலவை செய்து, அல்-காய்தா அமைப்பில் சேர்க்கும் செயலில் கலீமுதீன் ஈடுபட்டு வந்துள்ளார். சில இளைஞர்களை வெளிநாடுகளுக்கு பயங்கரவாத பயிற்சிக்காக அவர் அனுப்பியதும் தெரியவந்துள்ளது.
இந்திய துணைக் கண்டத்தில் செயல்படும் அல்-காய்தா பிரிவுக்கு ஆள்சேர்க்கும் வேலையில் ஈடுபட்டு வந்த முக்கிய பயங்கரவாதிகளான அப்துல் ரஹ்மான் அலி கான், அப்துல் ஷமி, சையது முகமது ஜீஷான் அலி ஹைதர் உள்ளிட்டோருடன் கலீமுதீன் நெருங்கிய தொடர்பில் இருந்ததும் கண்டறிப்பட்டுள்ளது. இவர்களில் அப்துல் ரஹ்மான், ஒடிஸா மாநிலத்தின் கட்டாக் நகரில் கடந்த 2015-இல் தில்லி காவல்துறையின் சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். கட்டாக்கில் உள்ள தனது மதரஸாவில் பயின்ற இளைஞர்களை, பயங்கரவாத இயக்கத்தில் சேர மூளைச்சலவை செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். 
ஹரியாணாவில் 2016-ஆம் ஆண்டில் முகமது ஷமியும், தில்லியில் 2017-ஆம் ஆண்டில் சையது முகமதுவும்  கைது செய்யப்பட்டனர். இந்த மூவரும் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கலீமுதீனும் கைதாகியிருப்பதன் மூலம் மேலும் பல முக்கிய விவரங்கள் காவல்துறையினருக்கு கிடைக்கும் என்றார் முராரி லால் மீனா.
இதனிடையே, கலீமுதீனை கைது செய்த பயங்கரவாத தடுப்புப் படையின் கண்காணிப்பாளர் ஏ.விஜய லஷ்மி தலைமையிலான சிறப்புக் குழுவினருக்கு ஜார்க்கண்ட் மாநில காவல்துறை தலைமை இயக்குநர் கமல் நாராயண் சௌபே வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com