பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங், வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: கல்யாண் சிங்குக்கு நீதிமன்றம் அழைப்பாணை

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கல்யாண் சிங், வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, அந்த மாநிலத்தின் முதல்வராக கல்யாண் சிங் பதவி வகித்தார். 
மசூதி இடிக்கப்படுவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 
அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக கல்யாண் சிங்கிடம் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. ஏனெனில், இந்த வழக்கு தொடர்பாக, கடந்த 1993-இல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் கல்யாண் சிங்கின் பெயரும் இடம்பெற்றிருந்தது.
ஆனால், கல்யாண் சிங், ராஜஸ்தான் மாநில ஆளுநராக, அரசியல் சாசன பதவி வகித்து வந்தார். அரசமைப்புச் சட்டத்தின் 361-ஆவது பிரிவின்படி அவரிடம் விசாரணை நடத்த முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.
இதனிடையே, கல்யாண் சிங்கின் பதவிக்காலம் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் நிறைவடைந்தது. அதன் பிறகு அவர் மீண்டும் பாஜகவில் இணைந்தார். 
இந்த தகவலை வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்கள் சிபிஐயிடம் தெரிவித்தனர். இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்த அனுமதிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் கடந்த 9-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ்,  வரும் 27-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு கல்யாண் சிங்குக்கு அழைப்பாணை அனுப்பி சனிக்கிழமை உத்தரவிட்டார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தினசரி அடிப்படையில் விசாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com