நிலையான பொருளாதார வளர்ச்சியே தேவை

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

இந்தியப் பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் வலியுறுத்தியுள்ளார்.
பருவநிலை மாற்றம் குறித்து ஐ.நா.வில் சனிக்கிழமை நடைபெற்ற மாநாட்டில் இதுகுறித்து அவர் பேசியதாவது:
இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருள்கள் குறைபாடுகள் இல்லாமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை உறுதிசெய்யவே, "குறைபாடும் இல்லாத, மாசுபாடும் இல்லாத' தயாரிப்பு (ஜீரோ டிஃபெக்ட், ஜீரோ எஃபெக்ட்) என்ற தாரக மந்திரத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்தியுள்ளார்.
தற்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏறுமுகத்தில் உள்ளது. இத்தகைய வளர்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கும் மக்களை நாம் ஏமாற்றக் கூடாது. அதுமட்டுமன்றி, பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்.
புவியின் வெப்பத்தை அதிகரிக்கக் கூடிய கார்பனைப் பிரித்தெடுத்து வளிமண்டலத்தை சுத்தப்படுத்துவது, அந்த கார்பனை உற்பத்தித் துறையில் பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக நீண்ட காலமாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், அதுதொடர்பாக போதிய அளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
கூடிய விரைவில், காற்றில் கலக்கும் கார்பனைப் பிரித்தெடுத்து, அதனை உற்பத்தித் துறையில் மூலப் பொருளாகப் பயன்படுத்துவதற்கான மையம் இந்தியாவில் முதல் முறையாக அமைக்கப்படும்.
தொழிற்சாலைகள் வெளியிடும் ஒவ்வொரு டன் கார்பனுக்கும், இந்திய அரசு 6 டாலர் (சுமார் ரூ.400) சுற்றுச்சூழல் வரி விதிக்கிறது. இதன் காரணமாக, காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கான மாற்றுத் திட்டங்கள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளன.
இந்தியாவின் சிமென்ட் உற்பத்தித் துறைதான் மிகக் குறைந்த அளவு புகை மாசுபாட்டை வெளிப்படுத்துகிறது. சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் நோக்கில், இந்திய விமானப் போக்குவரத்துக்கு உயிரி எரிபொருளைப் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார் அமைச்சர் ஜாவடேகர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com