2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி படிப்பு: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி ஆய்வுப் படிப்பு உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி படிப்பு: ஆய்வில் தகவல்

இந்தியாவில் 2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி ஆய்வுப் படிப்பு உள்ளது என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாடு தழுவிய அளவில் 2.5 சதவீத கல்லூரிகளில் மட்டுமே பிஎச்டி என்னும் முனைவர் பட்டத்துக்கான ஆய்வுப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. பிஎச்டி படிப்பில் அறிவியியல் தொடர்பான பாடங்களையே அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு செய்துள்ளனர். 

பிஎச்டி படிப்புகளில் சேர்ந்து பயின்று வரும் மாணவர்களின் எண்ணிக்கை 1,69,170-ஆக உள்ளது. இது,  ஒட்டுமொத்த மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 0.5 சதவீதத்துக்கும் குறைவான அளவு மட்டுமே.

நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்புகளை நடத்தும் கல்லூரிகளின் எண்ணிக்கை 34.9 சதவீதமாக உள்ளது. பிஎச்டி படிப்புகளில் மாணவர்கள் அறிவியல் பாடங்களையே அதிக எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்துள்ள போதிலும் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன. அதேசமயம், முதுகலை பட்டப்படிப்புகளில் அதிகபட்ச மாணவர்களின் தேர்வாக சமூக அறிவியல், நிர்வாகவியல் ஆகியவை உள்ளன.

பிஎச்டி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மாநில பொது பல்கலைக்கழகங்களில் அதிகபட்சமாக 34.3 சதவீதமாக உள்ளது. இதைத் தொடர்ந்து தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் (21.6%), நிகர்நிலை-தனியார் பல்கலைக்கழகங்கள் (21.6%) ஆகியவை உள்ளன.

மேலும், இளநிலை பட்டப்படிப்பை பொருத்தவரையில் பிஏ படிப்புகளை அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் தேர்வு செய்துள்ளதாக அந்த ஆய்வில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com