மேற்கு வங்கம்: ராஜீவ் குமாரை தேடும் பணியை தீவிரப்படுத்தியது சிபிஐ

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணையைத் தவிர்த்து தலைமறைவாக உள்ள மேற்கு வங்க சிஐடி காவல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜீவ் குமாரை தேடும் பணியை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை
மேற்கு வங்கம்: ராஜீவ் குமாரை தேடும் பணியை தீவிரப்படுத்தியது சிபிஐ

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் விசாரணையைத் தவிர்த்து தலைமறைவாக உள்ள மேற்கு வங்க சிஐடி காவல் துறையின் கூடுதல் இயக்குநர் ராஜீவ் குமாரை தேடும் பணியை சிபிஐ அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தீவிரப்படுத்தினர்.
ராஜீவ் குமார் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக, கொல்கத்தாவில் உள்ள அலிப்பூர் பாடிகார்டு லைன்ஸ், பார்க் தெருவில் அமைந்துள்ள அவரது இல்லம் உள்ளிட்ட இடங்களுக்கு சிபிஐ அதிகாரிகள் தனித்தனி குழுவாக ஞாயிற்றுக்கிழமை விரைந்தனர். இருப்பினும் அவரைக் கண்டறிய முடியவில்லை.
இதேபோல், கொல்கத்தாவில் பவானி பவனில் உள்ள சிஐடி காவல் துறை அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று சிபிஐ சிறப்பு அதிகாரிகள் தேடிப் பார்த்தனர். அவரது இருப்பிடத்தைக் கண்டறிய முடியவில்லை. அவர், செப்டம்பர் 25-ஆம் தேதி வரை விடுப்பில் இருப்பதாக, மேற்கு வங்க காவல் துறை தெரிவித்தது.
இதனிடையே, ராஜீவ் குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுவை அலிப்பூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை நிராகரித்து விட்டது.
மேற்கு வங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த சாரதா நிதி நிறுவனத்தின் மோசடி புகார்களை, ராஜீவ் குமார் தலைமையிலான குழு விசாரித்து வந்தது. அந்தக் குழு தனது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், சில முக்கிய ஆதாரங்களை ராஜீவ் குமார் மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, இந்த விவகாரத்தை விசாரித்து வரும் சிபிஐ, ராஜீவ் குமாரைக் கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்கு முயன்று வருகிறது. இந்த வழக்கில், ராஜீவ்குமாரைக் கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை, கொல்கத்தா உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, வழக்கு விசாரணைக்கு  நேரில் ஆஜராக வலியுறுத்தி, அவருக்கு ஏற்கெனவே 3 முறை சிபிஐ அழைப்பாணை அனுப்பியது. ஆனால், அவர் ஆஜராகவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com