ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நேருவே காரணம்: அமித் ஷா

ஆக்கிரப்பு காஷ்மீர் உருவாக நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவே காரணம்; அவர் பாகிஸ்தானுடன் தேவையற்ற நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்ததால்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது என்று மத்திய
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் அணிவித்த பிரம்மாண்டமான மாலையை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. உடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ
மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கட்சித் தொண்டர்கள் அணிவித்த பிரம்மாண்டமான மாலையை ஏற்றுக் கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. உடன் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ

ஆக்கிரப்பு காஷ்மீர் உருவாக நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவே காரணம்; அவர் பாகிஸ்தானுடன் தேவையற்ற நேரத்தில் போர் நிறுத்தத்தை அறிவித்ததால்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில சட்டப் பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுள்ள நிலையில், மும்பையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமித் ஷா பேசியதாவது:

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட விஷயத்தை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் அடையலாம் என்று காங்கிரஸ் முயற்சித்து வருகிறது. ஆனால், பாஜக அவ்வாறு சிந்திக்கவில்லை. காஷ்மீரில் நீடித்து வந்த பிரச்னைக்கு அண்டை நாட்டால் (பாகிஸ்தான்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியும் ஒரு முக்கியக் காரணம். அங்குதான் அதிகஅளவில் பயங்கரவாதி முகாம்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவாக நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருதான் காரணம். தேவையில்லாத ஒரு நேரத்தில் பாகிஸ்தானுடன் போரை நிறுத்துவதாக அவர் அறிவித்தார். இதனால், காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் இப்போதுவரை ஆக்கிரமித்து வைத்துள்ளது.

அந்த நேரத்தில் போரை நிறுத்தாமல், இந்தியா தொடர்ந்து போரை நடத்தியிருந்தால், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியை இந்திய ராணுவம் அப்போதே மீட்டிருக்கும்.

அன்றைய சூழ்நிலையில், பிரதமராக இருந்த நேருவுக்கு பதிலாக, உள்துறை அமைச்சர் வல்லபபாய் படேலிடம் காஷ்மீர் பிரச்னையை கையாளும் விஷயத்தை ஒப்படைத்திருக்க வேண்டும். அவர் நிச்சயமாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பை முறியடித்திருப்பார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போதைய மத்திய அரசு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அப்பகுதியை நாட்டுடன் ஒருங்கிணைத்துள்ளது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, காஷ்மீரில் இதுவரை ஒரு துப்பாக்கி தோட்டா கூட சுடப்படவில்லை. காஷ்மீரில் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டப்பட்டுவிட்டது. இனி, அங்கு எந்தவித வன்முறைக்கும் இடமில்லை.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை ஆதரிக்கிறார்களா அல்லது எதிர்க்கிறார்களா என்பதை மகாராஷ்டிர மக்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவாரும் தெளிவாக எடுத்துக் கூற வேண்டும்.

இந்திய பிரிவினைக்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வந்த மன்மோகன் சிங், ஐ.கே.குஜ்ரால் போன்றவர்கள் இந்தியாவின் பிரதமராகியுள்ளனர். அதேபோல எல்.கே.அத்வானி துணை பிரதமராகியுள்ளார். 

இந்தியாவின் வேறு பகுதிகளில் இருந்து காஷ்மீர் சென்று குடியேறியவர்கள் அங்கு வாக்குச் செலுத்த முடியாத நிலை இதுவரை இருந்தது. சிறப்பு அந்தஸ்து ரத்தான பிறகுதான் அவர்களுக்கு வாக்குரிமையே கிடைத்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உருவாக்கப்பட்டது முதல் இப்போதுவரை மத்திய அரசு அந்த மாநிலத்துக்கு ரூ.2.27 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. 

அதன் பலன்கள் மக்களைச் சென்றடையவில்லை. அந்த மாநில மக்கள் முழுமையாகப் பலன் அடைந்திருந்தால், அவர்களின் வீடுகளுக்கு தங்கத்தால் கூரை வேய்ந்திருக்க முடியும் என்றார் அமித் ஷா.

சிவசேனை பெயரைக் குறிப்பிடாத அமித் ஷா

மும்பை பொதுக்கூட்டத்தில் அமித் ஷா ஒருமுறை கூட கூட்டணிக் கட்சியான சிவசேனையின் பெயரைக் குறிப்பிடவில்லை. மகாராஷ்டிரத்தில் பாஜக-சிவசேனை கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேர்தலிலும் இந்தக் கூட்டணியே இணைந்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், இரு கட்சிகள் இடையே இதுவரை தொகுதிப் பங்கீடு முடியவில்லை. மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசின் நடவடிக்கைகளால் பாஜகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. எனவே, பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்று அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். 

ஆனால், மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஒப்புக் கொண்டபடி இரு கட்சிகளும் சம எண்ணிக்கையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டுமென்று சிவசேனை கூறி வருகிறது.

இதன் காரணமாக, தனது பிரசாரத்தில் சிவசேனையின் பெயரை அமித் ஷா ஒருமுறை கூட உச்சரிக்கவில்லை. "ஹரியாணாவில் பாஜக வெற்றி பெறும்; மகாராஷ்டிரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மூன்றில் இரு பங்கு இடங்களில் வெற்றி பெறும்', "பாஜக சார்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் மீண்டும் முதல்வராவார்' என்று மட்டுமே அமித் ஷா குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com