நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிடுவது முறையல்ல: உச்சநீதிமன்றம்

நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிடுவது முறையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்


நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிடுவது முறையில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான அகில் குரேஷியை மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு, மத்திய அரசுக்குக் கடந்த மே மாதம் 10-ஆம் தேதி பரிந்துரை செய்திருந்தது. ஆனால், அதற்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு காலந்தாழ்த்தி வருவதாகக் குற்றஞ்சாட்டி, குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.
இதை விசாரித்த உச்சநீதிமன்றம், கொலீஜியம் அமைப்பின் பரிந்துரை மீது ஒரு வாரத்துக்குள் முடிவெடுக்க வேண்டுமென கடந்த மாதம் 16-ஆம் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, குரேஷியின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யக் கோரி, அதனை மத்திய அரசு கடந்த மாதம் 28-ஆம் தேதி கொலீஜியம் அமைப்புக்குத் திருப்பியனுப்பியது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இரு கடிதங்களையும், சில ஆவணங்களையும் கொலீஜிய அமைப்புக்கு மத்திய அரசு அனுப்பியிருந்தது. அவற்றை ஆராய்ந்த கொலீஜியம் அமைப்பு, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்குப் பதிலாக, திரிபுரா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அகில் குரேஷியை நியமிப்பதற்குப் பரிந்துரை செய்ய முடிவெடுத்தது.
இந்நிலையில், குஜராத் உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அர்விந்த் ததார் வாதிடுகையில், கொலீஜியத்தின் புதிய பரிந்துரை மீது மத்திய அரசு முடிவெடுக்கும் வரை இந்த மனுவை நிலுவையில் வைக்க அனுமதிக்க வேண்டும் என்றார். இந்தக் கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். பின்னர் அவர்கள், நீதிபதிகளின் நியமனங்களும், பணியிட மாற்றங்களும் நீதித்துறையின் நிர்வாகத்துக்கு அடிப்படையாகும். நீதிபதிகள் நியமனங்களை மறுஆய்வு செய்ய மிகக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன. நீதித்துறையின் நிர்வாகத்தில் தலையிடுவது முறையல்ல என்றனர்.
கொலீஜியத்தின் பரிந்துரை மீது மத்திய அரசு எடுக்கும் முடிவைப் பொருத்து, இந்த மனு மீதான அடுத்தகட்ட விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com