இயல்புநிலை திரும்பியதும் ஜம்மு- காஷ்மீரில் தேர்தல்: மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி

இயல்புநிலை திரும்பியதும் ஜம்மு- காஷ்மீரில் தேர்தல்: மத்திய இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி

இயல்புநிலை திரும்பியதும் ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.


இயல்புநிலை திரும்பியதும் ஜம்மு- காஷ்மீரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
பெங்களூரில் அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:-
ஜம்மு- காஷ்மீரை மேம்படுத்துவதில் மத்திய அரசு அக்கறையாக உள்ளது. இயல்புநிலை திரும்பியதும்  சட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்படும். 
ஜம்மு- காஷ்மீர், லடாக்கில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.  வளர்ச்சிக்குத் தேவையான செயல்திட்டத்தை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் வகுத்துள்ளன.  
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல்கள் அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. தற்போது வட்டார வளர்ச்சிக் குழுவுக்கான தேர்தல்களும் நடத்தப்படவுள்ளன.
புதிய சட்டங்கள், திட்டங்கள்,  வளர்ச்சித் திட்டப் பணிகளை அமல்படுத்துவது குறித்து கிராமத் தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும். காஷ்மீர் பள்ளத்தாக்கில் பெரும்பாலான பள்ளிகள் பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடக்கின்றன. எதிர்வரும் காலத்தில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும். 
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 50 ஆயிரம் கோயில்கள் மூடப்பட்டுள்ளதாகவும்,  இதில் 90 சதவீதம் கோயில்கள் சேதமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தப்படும். 
பள்ளத்தாக்கில் திரையரங்குகளே இல்லை. 
பல ஆண்டுகளாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு யூனியன் பிரதேசங்கள் அக்டோபர் 31 முதல் அமலுக்கு வரும்: அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கி உள்ளதால், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. 
இதையடுத்து,  சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாளான அக்டோபர் 31-ஆம் தேதி முதல் ஜம்மு-  காஷ்மீர் மாநிலமானது ஜம்மு-காஷ்மீர், லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அமலுக்கு வரும். இதன் பின்னர், இரு யூனியன் பிரதேசங்களுக்கும் ஆளுநர்கள் நியமிக்கப்படுவர்.  
லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சண்டிகரை போல சட்டப்பேரவை இருக்காது. ஆனால், ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு தில்லி, புதுச்சேரியை போல சட்டப்பேரவை இருக்கும். 
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ஜம்மு- காஷ்மீரில் உள்ள அனைத்து கிராமங்களில் இருந்து தலா 5 இளைஞர்கள் வீதம் அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். ராணுவம், விமானப்படை, கப்பற்படை, மத்திய ஆயுத காவல் படை, எல்லை பாதுகாப்புப் படை உள்ளிட்ட அமைப்புகளில் பணி வழங்கப்படும். 
தகவல் தொடர்பு இல்லாமல் இருப்பதாகவும், அது உரிமைமீறல்கள் நடந்துள்ளதாகவும் அறிவுஜீவிகள் புகார் கூறி வருகின்றனர்.
அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 அமலில் இருந்தபோது அங்குள்ள மக்கள், பெண்களுக்கு அடிப்படை உரிமை இல்லாதபோது இவர்கள் எங்கு சென்றிருந்தார்கள்? சட்டம்- ஒழுங்கை கவனத்தில் கொண்டு, சில பகுதிகளில் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்த வகையில் மக்களின் ஆதரவை எதிர்பார்க்கிறோம் என்றார்.
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
370-ஆவது பிரிவை நீக்கிய பிறகு, பாகிஸ்தானின் திசைதிருப்பல் முயற்சிகளை முறியடித்து, அமெரிக்காவில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஆதரவு இந்தியா எடுத்துள்ள முடிவை அங்கீகரிப்பது போலாகும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
ஹூஸ்டனில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது. இது இந்திய, அமெரிக்க உறவை மேம்படுத்தும். உலகின் மிகப்பெரியஜனநாயக நாடுகளான இந்தியா,  அமெரிக்காவின் பொருளாதாரமும், பாதுகாப்பும் மேம்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் பயங்கரவாதத்தை எதிர்த்துபோராடுவது குறித்து பேசியுள்ளனர். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் எல்லை பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 
பிரதமர் மோடியின் முயற்சியால் பயங்கரவாத விவகாரத்தில் பாகிஸ்தானை தனிமைப்படுத்த முடிந்திருக்கிறது என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com