டிரம்ப்புக்கு பிரசாரம் செய்கிறார் மோடி: காங்கிரஸ் விமர்சனம்

அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிரசாரம் செய்துள்ளார் என்று
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி- டிரம்ப்.
ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி- டிரம்ப்.


அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப்புக்கு பிரசாரம் செய்துள்ளார் என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையையும் மோடி மீறிவிட்டார் என்று அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் மோடி நலமா என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டிரம்ப்புடன் இணைந்து மோடி பங்கேற்றதையும், அவர் பேசியதையும் சுட்டிக்காட்டி காங்கிரஸ் இவ்வாறு விமர்சித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான ஆனந்த் சர்மா இது தொடர்பாக சுட்டுரையில் (டுவிட்டர்) திங்கள்கிழமை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
வெளிநாட்டு தேர்தல் விவகாரத்தில் தலையிடுவதில்லை என்பது இந்தியா நீண்டகாலமாக கடைப்பிடித்து வரும் உயரிய கொள்கை. ஆனால், இதனை மீறி அமெரிக்கப் பயணத்தில் டிரம்ப்புக்கு ஆதரவாக மோடி, வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 
அமெரிக்காவில் குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி எது ஆட்சிக்கு வந்தாலும், இந்திய நலன்கள் சார்ந்து, நமது கொள்கைகளுக்கு ஏற்ப உறவைப் பேணுவதுதான் வழக்கமாக உள்ளது. ஆனால், இப்போது, மோடி, டிரம்ப்புக்கு ஆதரவாகப் பேசியுள்ளது இந்தியாவின் கொள்கைக்கு முரணானது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
நேருவின் புகழ்: மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஜனநாயகக் கட்சி என்.பி. ஸ்டெனி ஹோயர் வரவேற்றுப் பேசினார். அப்போது, மகாத்மா காந்தி, இந்தியாவின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோரது கருத்துகளை மேற்கோள் காட்டிப் பேசினார். தில்லியில் திங்கள்கிழமை இதனைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்களிடம் ஆனந்த் சர்மாக கூறுகையில், சுதந்திர இந்தியாவைக் கட்டமைத்த முதன்மையான தலைவர் நேரு. அவருக்கு எதிராக பாஜகவினர் திட்டமிட்டு பிரசாரம் மேற்கொள்கின்றனர். ஆனால், அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே, நேருவின் கருத்தை அந்நாட்டு எம்.பி. ஒருவர் சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார். இதன் மூலம், நேருவின் புகழ் எந்த அளவுக்குப் பரவியுள்ளது என்பதையும், இந்தியாவின் வளர்ச்சியில் அவருடைய பங்களிப்பு அசாதாரணமானது என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷும் இதே கருத்தைக் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைப் பதிவில், முன்பு நியூயார்க்கில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, நேருவைû புகழ்ந்து பேசியதையும், இந்தியாவின் தலைசிறந்த தலைவர்களில் ஒருவர் நேரு என்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் புகழாரம் சூட்டியதையும் பாஜகவினர் மறந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com