திகார் சிறையில் ப.சிதம்பரத்துடன் சோனியா காந்தி, மன்மோகன் சந்திப்பு

தில்லியில் சிகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தில்லியில் சிகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்  திங்கள்கிழமை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கை அரசியல் ரீதியாக எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 21-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் சிறைக்குச் சென்று பார்த்தனர். அவர்களுடன் ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரமும் சென்றிருந்தார்.
அவர்கள் இருவரும் ப.சிதம்பரத்தை சிறைக்கு வந்து சந்தித்தது மகிழ்ச்சியளிப்பதாக கார்த்தி சிதம்பரம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.  இந்தச் சந்திப்பு தங்களுக்கு வலிமையயும், ஆதரவையும் அளிப்பதாகவும் அவர் கூறினார்.
திகார் சிறையில் அரை மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்போது, மத்திய அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி வரிச்சலுகை, பெரு நிறுவன வரிக் குறைப்பு ஆகியவை குறித்தும், அதற்கு எதிர்வினையாற்றுவது குறித்தும் மன்மோகன் சிங்குடன்  ப.சிதம்பரம் விரிவாக விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பு குறித்து ப.சிதம்பரம் சார்பில் அவரது குடும்பத்தினர் பின்னர் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் சிறையில் என்னைச் சந்தித்ததை கெளரவமாக கருதுகிறேன். காங்கிரஸ் கட்சி வீரமும் தீரமும் கொண்டிருப்பதால், நானும் அவ்வாறே இருப்பேன்.
ஹூஸ்டன் நகரில் ஞாயிற்றுக்கிழை நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது, இந்தியாவில் அனைத்தும் சரியாக உள்ளது என்று குறிப்பிட்டார். ஆமாம், இந்தியாவில் வேலையின்மை, வேலையிழப்பு, கும்பல் வன்முறை, காஷ்மீரில் இயல்புநிலை பாதிப்பு, எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைப்பு ஆகியவற்றைத் தவிர மற்ற அனைத்தும் சரியாகவே உள்ளது அந்தச் சுட்டுரைப் பதிவில் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர்களான குலாம் நபி ஆஸாத், அகமது படேல் ஆகியோர் ப.சிதம்பரத்தை  கடந்த வாரம் திகார் சிறையில் சந்தித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com