வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையரின் மனைவிக்கு வருமான வரித் துறை நோட்டீஸ்

வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி நோவல் சிங்கால் லவாசாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.


வரி ஏய்ப்பு குற்றச்சாட்டில், தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவி நோவல் சிங்கால் லவாசாவுக்கு வருமான வரித் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக வருமான வரித் துறை வட்டாரங்கள் கூறியதாவது: வங்கி முன்னாள் உயரதிகாரியான நோவல் லவாசா, கடந்த 2015-2017 காலகட்டத்தில் பல்வேறு நிறுவனங்களில் இயக்குநராக பொறுப்பு வகித்துள்ளார். இந்த காலகட்டத்தில் அவர் வருமானத்தை மறைத்து, வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இதனை உறுதி செய்வதற்காக, அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்கு விவரங்கள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளன. சில விவரங்களுக்கு விளக்கம் கேட்டு, அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நிதி விவகாரங்கள் தொடர்புடைய சில கூடுதல் ஆவணங்களும் அவரிடம் கோரப்பட்டுள்ளன என்று வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து, நோவல் லவாசா ஞாயிற்றுக்கிழமை ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தார்.
அதில், எனது வருமானத்தையோ, அதற்கான ஆதாரங்களையோ எப்போதுமே நான் மறைத்ததில்லை. எனது வருமான வரி கணக்கு தாக்கல் விவரங்களில் முரண்பாடுகள் உள்ளதாக வெளியான தகவலும் உண்மையில்லை. கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து எனக்கு வருமான வரித் துறை அனுப்பி வரும் நோட்டீஸ்களுக்கு முறையாக பதிலளித்து வருகிறேன். வருமான வரித் துறையின் தற்போதைய நடவடிக்கைக்கும் உரிய ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2018, ஜனவரியில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டவர் அசோக் லவாசா. அண்மையில் நடைபெற்ற  மக்களவை தேர்தலில் நடத்தை நெறிமுறை மீறல் புகார்களில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கும், லவாசாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com