இந்திய அமெரிக்கர்களுக்கு டிரம்ப் புகழாரம்

அமெரிக்காவில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய அமெரிக்கர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.
இந்திய அமெரிக்கர்களுக்கு டிரம்ப் புகழாரம்


அமெரிக்காவில் நடைபெற்ற மோடி நலமா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்திய அமெரிக்கர்களுக்குப் புகழாரம் சூட்டினார்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் விதமாக, ஹூஸ்டன் நகரில் மோடி நலமா என்ற பெயரில் மிகப்பெரிய நிகழ்வுக்கு ஞாயிற்றுக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அமெரிக்கர்கள் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் டிரம்ப் பேசியதாவது:
வளமான எதிர்காலத்தையும், லட்சியங்களையும் அடைவதற்காக இந்தியாவும், அமெரிக்காவும் ஒன்றிணைந்துள்ளன. இதைக் கொண்டாடுவதற்காக, நானும், பிரதமர் மோடியும் இங்கு வந்திருக்கிறோம்.
அமெரிக்கா முழுவதும் சுமார் 40 லட்சம் இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் தங்கள் கடின உழைப்பால் நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செலுத்தி வருகிறார்கள். அவர்கள் அமெரிக்காவின் கலாசாரத்தை வலுப்படுத்துகிறார்கள்; உலக அரங்கில் அமெரிக்காவின் நன்மதிப்பை உயர்த்துகிறார்கள். இந்தியர்களை அமெரிக்கர்களாகப் பெற்றதற்காக உண்மையிலேயே நான் பெருமைப்படுகிறேன்.
டிரம்ப்பைப் போன்று ஒரு சிறந்த நண்பரை, ஒரு சிறந்த அமெரிக்க அதிபரை இந்தியா இதுவரை கண்டதில்லை என்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாங்கள் இந்தியாவை பெரிதும் நேசிக்கிறோம்; இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக அனுதினமும் எனது நிர்வாகம் போராடி வருவதை இந்தியாவுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். 
அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் கண்டுபிடித்துள்ள மருந்துகளால் எண்ணற்ற உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கின்றன. 
வளர்ந்து வரும் புரட்சிகரமான தொழில்நுட்பத்தால் உலகம் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த யுகத்தில் இங்குள்ள இந்தியர்கள் புதிய தொழில்களைத் தொடங்கி ஆயிரக்கணக்கானோர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளிக்கிறார்கள். 
இந்தியாவும், அமெரிக்காவும் இதுவரை கண்டிராத வளர்ச்சியை அடைவதற்கு திட்டமிட்டுள்ளது. அதற்காக, அமெரிக்க இந்தியர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்புகளை ஆராய்ந்து வருகிறேன் என்றார் டிரம்ப்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com