குஜராத்: திருடன் என்ற சந்தேகத்தில் ஒருவரை அடித்துக் கொன்ற கும்பல்- 3 பேர் கைது

குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் திருடன் என்ற சந்தேகத்தில் ஒருவரை 7 பேர் கும்பல் அடித்துக் கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.


குஜராத் மாநிலம், ஜாம்நகர் மாவட்டத்தில் திருடன் என்ற சந்தேகத்தில் ஒருவரை 7 பேர் கும்பல் அடித்துக் கொலை செய்தது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மெத்பார் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது:
மோட்டி காவ்டி கிராமத்தில், தனியார் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கியிருந்த ஒரு வீட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுவர் ஏறி குதித்து உள்ளே நுழைந்தார். வீட்டு ஜன்னலை உடைக்க முயன்ற அவர், வீட்டுக்குள் இருந்தவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். அவரை திருடன் என சந்தேகித்த ஊழியர்கள், உருட்டுக்கட்டை மற்றும் கம்புகளால் கடுமையாகத் தாக்கினர். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நபர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றினர். அத்துடன், தனியார் தொழிற்சாலை ஊழியர்களான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபாகர் திரிபாதி, யோகேஷ் சிங், பிகாரைச் சேர்ந்த மனோஜ் சிங் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள மேலும் 4 பேரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
பசுக்களை கடத்தியதாக ஒருவர் மீது தாக்குதல்: ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் பசுக்களை கடத்திச் சென்றதாக ஒருவர் மீது கிராம மக்கள் தாக்குதல் நடத்தினர்.
அல்வார் மாவட்டத்தின் ஷாஜஹான்பூர் பகுதியில் பசுக்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, காவல்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 6-7 பசுக்களை ஏற்றி வந்த இரு வாகனங்களை வழிமறித்து நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த வாகனங்கள் நிற்காமல் சென்றன. இதையடுத்து, கிராம மக்கள் திரண்டு, இரு வாகனங்களையும் மடக்கினர். அதில் ஒரு வாகனத்திலிருந்த முன்ஃபத் கான் என்பவரை பிடித்து, மக்கள் கடுமையாக தாக்கினர். படுகாயமடைந்த அவரை காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பசுக்களை கடத்தியதாக, கான் மீது ஏற்கெனவே புகார்கள் உள்ளதாகவும், அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஜார்க்கண்டில்...: ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் இறைச்சிக்காக பசுவை வெட்டியதாக 3 பேர் மீது கும்பல் தாக்குதல் நடத்தியது. இதில் ஒருவர் உயிரிழந்தார். அவர் மாற்றுத் திறனாளி ஆவார். காயமடைந்த இருவர், ராஞ்சியிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com