திட்டமிட்டபடி எதுவும் நடைபெறுவதில்லை: அயோத்தி வழக்கு விசாரணை குறித்து தலைமை நீதிபதி அதிருப்தி  

அயோத்தி வழக்கு விசாரணையில் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறுவதில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

புது தில்லி: அயோத்தி வழக்கு விசாரணையில் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறுவதில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

அயோத்தி வழக்கு தொடர்பான 14  மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், அசோக் பூஷண், எஸ்.ஏ. போப்டே, எஸ். அப்துல் நஸீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நாள்தோறும் நடைபெற்று வருகிறது. 

பல்லாண்டுகளாக நீடித்துவரும் இந்த வழக்கு விவகாரம் தொடர்பான விசாரணை பல்வேறு கட்டங்களைக் கடந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனை விரைவில் முடித்துவைக்கும் நோக்கத்துடன் தினசரி விசாரணை நடைபெறும் என்று அனைத்துத் தரப்பினரிடமும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற வாதங்களுக்கு இடையில், உச்சநீதிமன்றம் ஏற்கெனவே குறிப்பிட்ட அக்.18-ஆம் தேதி வரை மட்டுமே மேல்முறையீட்டு வாதங்கள் கேட்கப்படும் என்றும் அதற்குப் பிறகு எக்காரணம் கொண்டும் ஒருநாள் கூட விசாரணை நீட்டிக்கப்பட மாட்டாது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் திட்டவட்டமாகக் கூறினார்.

அத்துடன், 'ஏஎஸ்ஐ அறிக்கை தொடர்பான வாதத்தை முஸ்லிம் தரப்பினர் விரைந்து முன்வைக்க வேண்டும். வழக்கு தொடர்பான வாதங்களை முன்வைக்க அக்டோபர் 18-ஆம் தேதிக்கு மேல் எந்தத் தரப்பினருக்கும் அனுமதி தரப்பட மாட்டாது. அதற்குள் விசாரணையை முடிப்பது தொடர்பான திட்டத்தை ஹிந்து தரப்பினரும், முஸ்லிம் தரப்பினரும் தெரிவிக்க வேண்டும். அக்டோபர் மாதத்தில் பல்வேறு விடுமுறைகள் வருவதால், ஹிந்து தரப்பினரின் இறுதி வாதங்களை வழங்க, 4 வழக்குரைஞர்களில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்துக்குள் வாதங்கள் நிறைவடைந்து, இந்த வழக்கில் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டால், அது மிகவும் அதிசயமாகவே இருக்கும்' என்று தலைமை நீதிபதி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அயோத்தி வழக்கு விசாரணையில் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறுவதில்லை என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விசாரணையில் முஸ்லிம் தரப்பு ஒன்றிற்காக மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே, தனது வாதங்களை முன்வைத்துக் கொண்டிருந்தார். மதியம் ஒரு மணி வரை வாதங்களை அமர்வு கேட்பதாக இருந்த நிலையில், வாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்க, என்னும் எவ்வளவு நேரம் தேவைப்படும் என்று தலைமை நீதிபதி வினவினார். அதற்கு தான் ஏற்கனவே 45 நிமிடங்கள் வாதாடியுள்ளதாகவும், இன்னும் ஒரு மணி நேரத்திற்கு கூடுதலாக தேவைப்படும் என்று கூறினார். இதையடுத்து உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்கள் முன்னதாக  அமர்வு கலைந்தது.

அப்போது தலைமை நீதிபதி, ' அயோத்தி வழக்கு விசாரணையில் திட்டமிட்டபடி எதுவும் நடைபெறுவதில்லை.   நாங்கள் நேரத்தைக் குறித்து வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறோம்' என்று தனது அதிருப்தியை நீதிமன்ற அறையிலேயே வெளிப்படுத்தினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com