ஐ.நா.சபையில் காஷ்மீர் விவகாரத்தை கிளப்பிய சீனாவுக்கு இந்தியா பதிலடி

ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும்
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்
இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார்


நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற கருத்தரங்கில் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், இப்பகுதி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் முற்றிலும் நாட்டிற்கு உட்பட்டவை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தெரிவித்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 74-ஆவது கூட்டத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பேசுகையில்,  ‘நெடுங்காலமாக கிடப்பில் இருக்கும் காஷ்மீர் விவகாரம் தொடர்பான வில்லங்கங்கள் அனைத்தும் ஐ.நா. பொதுச் சபை விதித்துள்ள பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்கள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தத்தின் படி அமைதியாகவும், முறையாகவும் வகையில் தீர்க்கப்பட வேண்டும்.

ஏற்கெனவே அங்குள்ள நிலைமைகளை மாற்ற ஒருதலைப்பட்சமாகவும், தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்கப்பட கூடாது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அண்டைநாடு என்ற வகையில் இந்த விவகாரம் சரியான முறையில் கையாளப்பட வேண்டும். இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகள் நீடிக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்பிகிறோம்’ என்று வலியுறுத்தினார். 

இந்நிலையில், இதுதொடர்பாக சீனாவுக்கு இன்று சனிக்கிழமை பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றும், காஷ்மீர் தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் "முழுக்க முழுக்க எங்கள் நாட்டின் உள்விவகாரம்" என்று கூறினார்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை சீனத் தரப்பு நன்கு அறிந்திருக்கிறது என்றவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் சட்டவிரோதமாக சீனா-பாகிஸ்தான் பொருளாதார மண்டலம் அமைப்பது ஆகிய முயற்சிகளை தவிர்த்து, இந்தியாவின் எல்லைக்குட்பட்ட விவகாரங்கள் மற்றும் இந்தியாவின் இறையாண்மைக்கு மற்ற நாடுகள் மதிப்பளிக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.

கடந்த மாதம் இந்தியா ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை விலக்கிக் கொண்டதுடன், மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இது அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com