சட்டப்பிரிவு 370 ரத்து: அரசியல் சாசன அமர்வை அமைத்தது உச்சநீதிமன்றம்

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான மனுக்களை விசாரிக்க நீதிபதி என்வி ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் அமைத்தது
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்


ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான மனுக்களை விசாரிக்க நீதிபதி என்வி ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்சநீதிமன்றம் இன்று (சனிக்கிழமை) அமைத்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவு 370-ஐ மத்திய அரசு கடந்த மாதம் ஆகஸ்ட் 5-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுதொடர்பான மனுக்களைக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தெரிவிக்கையில், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், நீதிபதி என்வி ரமணா தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்தது தொடர்பான மனுக்கள் மீது அடுத்த மாத தொடக்கத்தில் விசாரணை நடைபெறும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவகாரத்துக்கு மட்டுமின்றி, மேலும் மூன்று அமர்வுகளையும் உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. மரண தண்டனை தொடர்பான விவகாரங்களை விசாரிப்பதற்கு 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வும், வரி விவகாரங்களை விசாரிப்பதற்காக தலா 2 நீதிபதிகள் அடங்கிய 2 அமர்வுகளும் அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com