குரு நானக் பிறந்த தினம்: மனிதாபிமான அடிப்படையில் 8 சீக்கிய கைதிகள் விடுதலை

குரு நானக்கின் 550-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, மனிதாபிமான அடிப்படையில் 8 சீக்கிய கைதிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மற்றொரு சீக்கியரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் மத்திய அரசு

குரு நானக்கின் 550-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, மனிதாபிமான அடிப்படையில் 8 சீக்கிய கைதிகளை மத்திய அரசு விடுவித்துள்ளது. மற்றொரு சீக்கியரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும் மத்திய அரசு குறைத்துள்ளது. 
சீக்கிய மதத்தைத் தோற்றுவித்த குரு நானக் தேவின் 550-ஆவது ஆண்டு பிறந்த தினம் வரும் நவம்பர் மாதம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு, குரு நானக்கின் நினைவாக பாகிஸ்தானின் கர்தார்பூரில் எழுப்பப்பட்ட தர்பார் சாஹிப் குருத்வாராவுக்கு, இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள வசதியாக குருதாஸ்பூரிலிருந்து வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது. 
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தில்லியில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
குரு நானக்கின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நாட்டின் வெவ்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 8 சீக்கிய கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்க முடிவெடுத்துள்ளோம். மற்றொரு சீக்கியருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்துள்ளோம்.
அவர்கள் அனைவரும் பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 1970-களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களின்போது கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்பட்டவர்கள் ஆவர். அவர்களை விடுவிக்கக் கோரி சீக்கியர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை ஏற்கும் வகையில் அவர்களை மத்திய அரசு விடுவித்துள்ளது.
மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த தினத்தை முன்னிட்டு, இதுவரை 1,424 கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; மேலும் சில கைதிகளை விடுவிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக, மாநில அரசுகளிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் ஆலோசித்து வருகிறோம் என்று உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com