Enable Javscript for better performance
5 ஆண்டுகளில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரிப்பு: தாயகம் திரும்பிய மோடி பெருமிதம்- Dinamani

சுடச்சுட

  

  5 ஆண்டுகளில் இந்தியாவின் நன்மதிப்பு அதிகரிப்பு: தாயகம் திரும்பிய மோடி பெருமிதம்

  By DIN  |   Published on : 29th September 2019 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  p,

  வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை நாடு திரும்பிய  பிரதமர் மோடியை தில்லி பாலம் விமான நிலையத்தில் வரவேற்ற பாஜக மூத்த தலைவர்களும் தொண்டர்களும்.

  கடந்த 5 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியாவின் நன்மதிப்பும், இந்தியா மீதான ஆர்வமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது என்று அமெரிக்காவில் இருந்து தாயகம் திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

  ஒரு வார பயணமாக  அமெரிக்கா சென்றிருந்த மோடி, ஹூஸ்டன் நகரில் "மோடி நலமா?' என்ற பெயரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொண்டார். அதைத் தொடர்ந்து,  நியூயார்க் நகரில் ஐ.நா. பருவநிலை மாநாட்டிலும், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திலும் மோடி உரையாற்றினார். பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தையும் நடத்தினார்.

  இந்நிலையில் மோடி தனது பயணத்தை முடித்துக் கொண்டு சனிக்கிழமை தாயகம் திரும்பினார். அவரை வரவேற்பதற்காக, தில்லி பாலம் விமான நிலையத்தில் பாஜக சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும், ஏராளமான தொண்டர்களும் மோடியை வரவேற்பதற்காக முன்கூட்டியே வந்திருந்தனர்.

  பிரதமர் மோடி, தில்லி விமான நிலையத்தை வந்தடைந்ததும், மேளதாளங்கள் முழங்க, அவரை தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். 

  அதைத் தொடர்ந்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

  இது, என் வாழ்வில் மறக்க முடியாத வரவேற்பு நிகழ்ச்சி. கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமராகப் பதவியேற்ற பிறகு, அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அதே நாட்டுக்கு கடந்த வாரம் சென்று வந்திருக்கிறேன். 

  கடந்த 5 ஆண்டுகளில் நமது நாடு குறித்தான மிகப்பெரிய மாற்றத்தைப் பார்க்கிறேன். உலக அரங்கிலும், உலகத் தலைவர்கள் மத்தியிலும், இந்தியா மீதான நன்மதிப்பும், இந்தியா மீதான ஆர்வமும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. அதற்கு முக்கியக் காரணம், இங்குள்ள 130 கோடி இந்தியர்கள் வலிமையான ஓர் அரசை தேர்ந்தெடுத்து, ஆட்சிக் கட்டிலில் அமர்த்தியிருப்பதுதான்.

  மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே நாளில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை நமது ராணுவத்தினர் குண்டுகளை வீசித் தாக்கி அழித்தனர். தாக்குதல் நடந்த அந்த இரவு முழுவதும் நான் உறங்கவில்லை. 

  ராணுவ உயரதிகாரிகளின் தொலைபேசி அழைப்புக்காக காத்திருந்தேன். அந்த தாக்குதலில் துணிச்சல் மிக்க நமது வீரர்கள் வெற்றிபெற்று, இந்தியாவுக்கு பெருமை சேர்த்தனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் தலை வணங்குகிறேன்.

  நவராத்திரி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் மோடி.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai