பணியிடங்களில் பாலியல் தொந்தரவு: சட்டத் திருத்தம் மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை

பணியிடங்களில் நிகழும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
பணியிடங்களில் பாலியல் தொந்தரவு: சட்டத் திருத்தம் மேற்கொள்ள மகளிர் ஆணையம் பரிந்துரை

பணியிடங்களில் நிகழும் பாலியல் குற்றங்களில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

இதுதொடர்பாக, மகளிர் மற்றும் சிறார் மேம்பாட்டுத் துறை அமைச்சகத்துக்கு அந்த ஆணையம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
பெண்கள் பணியாற்றும் அலுவலகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றில் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கு தனிக் குழு (விசாகா குழு) அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்தக் குழுவில் குறைந்தபட்சம் 4 உறுப்பினர்கள் இடம்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஒற்றைப்படையில் இருக்குமாறு அமைக்க வேண்டும். அப்போதுதான் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தை நடைமுறைப்படுத்த முடியும். மேலும், அந்தக் குழுவில் இடம்பெறும் உறுப்பினர்கள் வெளிப்படையான முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். 

பாலியல் புகார்களை தெரிவிப்பதற்கான கால வரம்பை 3 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக நீட்டிக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், இணையவழி சார்ந்த குற்றங்களையும் சேர்க்க வேண்டும். இதற்காக, கடந்த 2013-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். மேலும், சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் சட்டப் பிரிவை நீக்க வேண்டும். ஏனெனில், இந்த சட்டப் பிரிவால், புகார்களைத் திரும்பப் பெறுமாறு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மறைமுமாக நெருக்கடி கொடுக்கப்பட வாய்ப்புள்ளது.  இதுதவிர, பாலியல் தொந்தரவுகளின் தீவிரத்தை வைத்து, குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பரிந்துரை செய்யும் அதிகாரத்தை விசாகா குழுவுக்கு அளிக்கப்பட வேண்டும்.

பாலியல் புகார்களை விசாரிப்பதற்காக, விசாகா குழுவுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் சீரான கால இடைவெளியில் பயிற்சிகள் அளிக்க வேண்டும் என்று அந்தப் பரிந்துரை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com