இந்தியாவை சீர்குலைக்க நினைக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

இந்தியாவை பாகிஸ்தான் சீர்குலைக்க நினைப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவை சீர்குலைக்க நினைக்கிறது பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

இந்தியாவை பாகிஸ்தான் சீர்குலைக்க நினைப்பதாகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையிலுள்ள மஸகான் கப்பல் கட்டும் தளத்தில், "ஸ்கார்பீன்' ரகத்தைச் சேர்ந்த ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலை ராஜ்நாத் சிங் சனிக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியக் கடற்படைக்காகப் புதிதாகக் கட்டப்பட்ட ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பலையும் அவர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
விமானம் தாங்கிப் போர்க்கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் உள்நாட்டில் தயாரிக்கும் வலிமையை இந்தியா பெற்றுள்ளது. உலக அளவில் சில நாடுகள் மட்டுமே இச்சிறப்பைப் பெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு கப்பல்கட்டும் தளங்களில் கட்டப்பட்டு வரும் 51 கப்பல்களில், 49 கப்பல்கள் முழுவதும் உள்நாட்டுத் தயாரிப்பாகும்.
பொருள்களின் பணமதிப்பில் 70 சதவீத வர்த்தகமும், பொருள்களின் அளவு அடிப்படையில் 95 சதவீத வர்த்தகமும் கடல் வழியாகவே நடைபெறுகின்றன. கடற்கொள்ளை, பயங்கரவாதம், கலவரம் உள்ளிட்டவை கடல்வழி வர்த்தகத்துக்கு இடையூறு ஏற்படுத்த வல்லவை. வர்த்தகம் பாதிக்கப்பட்டால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே, அவற்றை ஒழிக்க இந்தியா உறுதிகொண்டுள்ளது.
"தாக்கும் திறன் மேம்பட்டுள்ளது': நமது அண்டை நாடு (பாகிஸ்தான்) நம்மை சீர்குலைக்க நினைக்கிறது. அரசு ஆதரவு பயங்கரவாதம் இந்தியாவுக்குப் பெரும் சவாலாக விளங்குகிறது. அதை எதிர்கொள்ள இந்தியா தயாராகவும், வலிமையுடனும் உள்ளது. தகுந்த நேரத்தில் கடுமையான முடிவுகளை எடுக்க மத்திய அரசு தயக்கம் காட்டாது. ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததும் அதுபோன்ற முடிவுகளில் ஒன்றுதான். இந்த முடிவானது, ஜம்மு-காஷ்மீரிலும், லடாக்கிலும் வளர்ச்சியை ஏற்படுத்தும் என மத்திய அரசு நம்பிக்கை கொண்டுள்ளது. 
ஐஎன்எஸ் காந்தேரியும், ஐஎன்எஸ் நீலகிரியும் தற்போது கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தியாவின் தாக்கும் திறன் மேம்பட்டுள்ளது என்பதை பாகிஸ்தான் புரிந்துகொள்ள வேண்டும். 
பாகிஸ்தானுக்கு இந்தியக் கடற்படை கடந்த 1971-ஆம் ஆண்டு தகுந்த பதிலடி கொடுத்தது. தற்போது அதைவிட வலிமையான தாக்குதல் தொடுக்க இந்தியக் கடற்படை திறன் பெற்றுள்ளது. 
இந்தியா மீது நம்பிக்கை: கடற்படையை நவீனமயமாக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. நவீன ஆயுதங்களும், சென்சார்களும் கடற்படையில் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்தியப் பெருங்கடல் பகுதியில் வர்த்தகப் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியில் செல்லும் கப்பல்களுக்கு இந்தியா உரிய பாதுகாப்பு வழங்கும் என்ற நம்பிக்கையை உலக நாடுகள் கொண்டுள்ளன. அரபிக் கடல் பகுதியில் கடற்கொள்ளைகள் குறைந்திருப்பதற்கு இந்தியக் கடற்படையின் நடவடிக்கைகளே காரணம்.
முயற்சிகள் எடுபடாது: மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு தாக்குதல் நடத்தியதுபோல், கடல்வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து மீண்டுமொரு தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் முயற்சித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர்களின் திட்டம் நிறைவேறாது. அவர்களின் திட்டத்தை இந்தியக் கடற்படை முறியடிக்கும். 
அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அமைதியைக் குலைக்க முயற்சிக்கும் நாடுகள் மீது இந்தியக் கடற்படை வலுவான தாக்குதல் தொடுக்கும்.
இந்தியாவுக்குப் பெருமை: கடல்வழிப் பாதுகாப்பில் மற்ற நாடுகள் நம்மைச் சார்ந்திருப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாகும். ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பலானது வலிமையுடன் செயல்பட்டு, இந்தியாவின் பெருமையைத் தக்கவைக்கும் என்று நம்புகிறேன். இந்தியாவின் கப்பல் கட்டும் திறனையும், அமைதியை விரும்பும் பண்பையும் மற்ற நாடுகளுக்கு நமது கடற்படையைச் சேர்ந்த கப்பல்கள் எடுத்துரைக்கும் என்றும் நம்புகிறேன் என்றார் ராஜ்நாத் சிங்.
இந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங்கின் மனைவி சாவித்ரி சிங், கடற்படைத் தலைமைத் தளபதி கரம்வீர் சிங், கடற்படை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
சிறப்பம்சங்கள்: ஐஎன்எஸ் நீலகிரி போர்க்கப்பலானது 2,650 டன் எடை கொண்டதாகும். எதிரி நாட்டு ரேடார் கருவி மூலம் கண்டுபிடிக்கப்பட முடியாத வகையில், இந்தக் கப்பலில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. 
மஸகான் கப்பல் கட்டும் நிறுனத்தால் கட்டப்பட்ட ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலானது, ஐஎன்எஸ் காந்தேரி நீர்மூழ்கிக் கப்பலானது, "ஸ்கார்பீன்' ரகத்தைச் சேர்ந்த இரண்டாவது கப்பலாகும்.  இதே ரகத்தைச் சேர்ந்த மேலும் 4 நீர்மூழ்கிக் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com