வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை: விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி

நாடு முழுவதும் வெங்காயம் விலை கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இந்தத் தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உள்நாட்டுச் சந்தையில் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தற்போது வெங்காயம் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கையிருப்பு வைக்கவும் கட்டுப்பாடு: இதைத் தவிர, வர்த்தகர்கள் வெங்காயத்தை கையிருப்பு வைக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், பதுக்கலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் நுகர்வோர் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து, சில்லறை வியாபாரிகள் இனி 100 குவின்டால் (10,000 கிலோ)  வெங்காயத்தை மட்டுமே கையிருப்பில் வைத்திருக்க முடியும். மொத்த விற்பனையாளர்களைப் பொருத்தவரையில் 500 குவின்டால் (50,000 கிலோ) வரையில் வெங்காயத்தை இருப்பு வைத்துக் கொள்ளலாம்.

குறைந்தபட்ச விலைக்கும் கீழாக வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு வெங்காய ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நடவடிக்கை மத்திய அரசின் இந்த உத்தரவையடுத்து உடனடியாக நிறுத்தப்படுகிறது. மேலும், இந்த விதிமுறைகளை மீறும் வர்த்தகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெய்த கனமழையால் வெங்காயம் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக, சந்தைகளில் வரத்து குறைந்து வெங்காயத்தின் விலை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. விலை உயர்வை கட்டுப்படுத்தவும், சந்தையில் வரத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அது உரிய பலனளிக்கவில்லை. இதையடுத்தே, மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தேசிய தலைநகர் புதுதில்லி மற்றும் நாட்டின் இதர பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் தற்போது ரூ.60-ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் (டிஜிஎஃப்டி), "அனைத்து வகையான வெங்காய ஏற்றுமதிக்கும் தடைவிதிக்கப்படுவதுடன், அது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது' என அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

டிஜிஎஃப்டி, உள்நாட்டில் விலை குறைய ஏதுவாக,  ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு டன் வெங்காயத்துக்கான குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை 850 டாலராக செப்டம்பர் 13-ஆம் தேதி நிர்ணயித்தது. இந்த குறைந்தபட்ச ஏற்றுமதி விலைக்கு குறைவாக யாரும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தகர்கள் இருப்பு வைக்கும் அளவை நிர்ணயிக்க மாநில அரசுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும், இந்த முறை அந்த அதிகாரத்தை மத்திய அரசு கையிலெடுத்து வெங்காயத்தை இருப்பு வைப்பதற்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. 

மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கைகளையடுத்து, உள்நாட்டுச் சந்தைகளில் வெங்காயத்தின் விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், விலை உயர்விலிருந்து மக்களைப் பாதுகாக்கும் விதமாக புது தில்லியில் மதர் டயரி விற்பனையகங்களில் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.23.90-க்கு அரசு விற்பனை செய்கிறது. இங்கு இதுவரையில், 5,000 டன் வெங்காயம் விற்பனையாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com