பிகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 29 பேர் பலி; விமானப் படையின் உதவி கேட்கும் நிதிஷ் அரசு

பிகார் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பாட்னா உள்பட பல்வேறு இடங்களில் மழையால் நேரிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.
பிகாரில் கொட்டித் தீர்க்கும் கனமழை: 29 பேர் பலி; விமானப் படையின் உதவி கேட்கும் நிதிஷ் அரசு

பிகார் மாநிலத்தில் இடைவிடாது பெய்து வரும் கனமழையால், பாட்னா நகரம் வெள்ளத்தில் மிதக்கிறது. பாட்னா உள்பட பல்வேறு இடங்களில் மழையால் நேரிட்ட சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளம் பாதித்த பாட்னா உள்ளிட்ட இடங்களில் மருந்து, உணவுப் பொருட்களை வழங்கவும், மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் விமானப் படையின் இரண்டு ஹெரிகாப்டர்களை அனுப்புமாறு நிதிஷ் குமார் தலைமையிலான அரசு கோரிக்கை வைத்துள்ளது.

பாட்னாவில் 2.5 லட்சம் மக்கள் உட்பட பிகார் முழுவதும் சுமார் 16 லட்சம் மக்கள் கன மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் கடந்த சில நாள்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பாட்னா, பாகல்பூர், கைமூர் ஆகிய மாவட்டங்கள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. அங்கு தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் சாலை, ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

பாட்னாவில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் 200 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மழை பாதிப்புகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் முதல்வர் நிதீஷ் குமார் காணொலி முறையில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்துள்ளது. மக்கள் பொறுமையும் அமைதியும் காக்க வேண்டும்" என்றார்.

பாகல்பூர் மாவட்ட ஆட்சியர் பிரணவ் குமார் கூறுகையில், "பராரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் மழையால் கோயிலின் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேரும், கஞ்சர்பூர் பகுதியில் வீடு இடிந்ததில் 3 பேரும் உயிரிழந்தனர்' என்றார்.

வீடு இடிந்த சம்பவத்தில் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பாட்னாவின் புறநகர்ப் பகுதியான தனாப்பூரில், ஆட்டோ மீது மரம் சரிந்து விழுந்ததில் ஒரு வயது குழந்தையும், 3 பெண்களும் உயிரிழந்தனர். கைமூர் மாவட்டத்தின் பாபுவா பகுதியில் தொடர் மழையால் 2 குடிசை வீடுகள் இடிந்தன. இதில் 3 பேர் உயிரிழந்தனர். ககாரியா, நவேடா ஆகிய பகுதிகளில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு 5 பேர் பலியாகினர்.

வெள்ளக்காடான பாட்னா : தலைநகர் பாட்னாவில் முக்கியப் பிரமுகர்களின் இல்லங்கள் அமைந்துள்ள ராஜேந்திர நகர், பாடலிபுத்திரா காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மருத்துவமனைகளுக்குள் வெள்ளம் புகுந்ததால், நோயாளிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலர் பிரத்யய் அம்ரித் கூறியதாவது:

பிகாரின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கடந்த வாரம் கணித்திருந்தது. அதேசமயம், பாட்னாவுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.

இதனால், பாட்னாவில் கனமழை பெய்யுமென எதிர்பார்க்கவில்லை. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையின் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களுக்குள் தண்ணீர் புகுந்திருப்பது, மீட்புப் பணிக்கு சவாலாக மாறியுள்ளது. கனமழை தொடரும் பட்சத்தில், தாழ்வான இடங்களில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி முடங்கக் கூடும் என்றார் அவர்.

30 ரயில்கள் ரத்து: இதனிடையே, பாட்னா, தனாப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், அந்த வழியாக இயக்கப்படும் 30 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன என்று கிழக்கு மத்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com