இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்

இளைஞர்கள் புதிய வித போதைக்கு அடிமையாகாமல் தடுக்கவே இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது ஏன்?: பிரதமர் மோடி விளக்கம்

இளைஞர்கள் புதிய வித போதைக்கு அடிமையாகாமல் தடுக்கவே இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இ-சிகரெட்டுகளின் விற்பனை, உற்பத்தி ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை இம்மாதத் தொடக்கத்தில் அவசரச் சட்டம் மூலம் தடை விதித்தது. அதன் பிறகு இந்த விவகாரம் தொடர்பாக மோடி தெரிவித்துள்ள முதல் கருத்து இதுவாகும். அவர் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மன் கீ பாத்-தில் (மனதின் குரல்) ஞாயிற்றுக்கிழமை இது குறித்துக் கூறியதாவது:

வழக்கமான சிகரெட்டுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. புகை பிடிப்பவர்களுக்கும் சிகரெட்டுகளை விற்பவர்களுக்கும் அதன் தீமைகள் குறித்து தெரியும். ஆனால் இ-சிகரெட்டுகளின் நிலையோ வேறுவிதமாக உள்ளது. அவை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே குறைவாகவே உள்ளது. அவற்றின் அபாயம் குறித்து பலரும் எதுவும் தெரியாதவர்களாக உள்ளனர். அவை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வத்தால் கூட இ-சிகரெட்டுகள் சில நேரங்களில் நமது வீடுகளுக்குள் நுழைந்து விடுகின்றன.

இ-சிகரெட்டுகளால் உடல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து ஏதும் இல்லை என்ற மாயை பரப்பப்படுகிறது. வழக்கமான சிகரெட்டுகளைப் போலன்றி இ-சிகரெட்டுகளில் கெட்ட வாடை வீசுவதில்லை. அதற்கு அதில் சேர்க்கப்படும் நறுமணம் பரப்பும் ரசாயனப் பொருள்கள்தான் காரணம். இந்த ஆபத்தான ரசாயனங்கள் உடலுக்குத் தீங்கிழைக்கக் கூடியவை.

இ-சிகரெட் புகைப்பது ஒரு நாகரிகம் போல் மாறியது. நிகோடின் போதைக்கு ஆளாகும் புதிய வழிமுறையாக இது உருவெடுத்தது. எனவே, நம் நாட்டின் இளைஞர்கள் புதிய வித போதைக்கு அடிமையாகாமல் தடுப்பதற்காகவே இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. இ-சிகரெட்டுகள் ஒரு குடும்பத்தின் கனவுகளைச் சிதைத்து, நமது குழந்தைகளின் வாழ்க்கையை வீணடிக்கக் கூடாது. அவற்றைப் புகைக்கும் விரும்பத்தகாத பழக்கம் நமது சமூகத்தில் வேரூன்றக் கூடாது. மக்கள் புகையிலைப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என்று மோடி தெரிவித்தார்.

லதா மங்கேஷ்கரின் பணிவு: இதனிடையே, பிரபல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் தனது 90-ஆவது பிறந்த நாளை கடந்த 28-ஆம் தேதி கொண்டாடினார். அது பற்றி மோடி தனது வானொலி உரையில் கூறியதாவது:
நான் அமெரிக்காவுக்கு ஒரு வார கால சுற்றுப்பயணம் புறப்படும் முன் லதா மங்கேஷ்கரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினேன். உங்களுக்கு பிறந்த நாள் வரும்போது நான் விமானத்தில் பயணித்துக் கொண்டிருப்பேன் என்றும் அதனால் முன்கூட்டியே பிறந்த நாள் வாழ்த்து கூறுவதாகவும் தெரிவித்தேன். இந்தத் தொலைபேசி அழைப்பால் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், எனது வாழ்த்துகளை நாடுவதாகவும் லதா மங்கேஷ்கர் தெரிவித்தார்.

அதற்கு, உங்களுடைய ஆசியை நாங்கள் நாடுகிறோம் என்றும் நீங்கள் வயதில் மூத்தவர் - மூத்த சகோதரி போன்றவர் என்றும் நான் குறிப்பிட்டேன். அதற்கு லதா மங்கேஷ்கர் கூறுகையில், இவை அனைத்துக்கும் தனது பெற்றோர்கள் மட்டும் ரசிகர்களின் ஆசியே காரணம் என்றும் இதில் தனது பங்கு ஏதும் இல்லை என்றும் பணிவுடன் தெரிவித்தார். அவரது பணிவான குணம் நமக்கு உத்வேகம் அளிக்கிறது.

நான் எப்போது உங்களைச் சந்திக்க வந்தாலும் சில குஜராத்தி உணவு வகைகளை நீங்கள் அளிக்கிறீர்கள் என்றும் குடும்பத்தைப் போன்ற இந்தப் பாசம் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் நான் கூறினேன். அதற்கு அவர் கூறுகையில், "நீங்கள் பிரதமர் பதவியை ஏற்ற பிறகு இந்தியாவின் தோற்றம் மாறி வருகிறது' என்று குறிப்பிட்டார். அப்போது, "நீங்கள் நாட்டு மக்களை தொடர்ந்து ஆசிர்வதிக்க வேண்டும்' என்று நான் கேட்டுக் கொண்டேன்.

ரஷிய வீரரின் பேச்சு: இதேபோல், அண்மையில் ரஷிய டென்னிஸ் வீரரின் பேச்சு என் இதயத்தைத் தொட்டது. அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரஃபேல் நடாலிடம் ரஷியாவின் இளம் வீரரான டேனில் மெத்வதேவ் தோல்வியடைந்தார். எனினும், ஆட்டம் முடிந்த பின் மெத்வதேவ் ஆற்றிய உரை அனைவரது உள்ளங்களையும் கவர்ந்தது. அது அவரது முதிர்ச்சியையும் பணிவையும் வெளிப்படுத்தியது. 

அதேபோல் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு டென்னிஸ் விளையாட்டில் ஊக்கமளிக்கும் சக்தியாக ரஃபேல் நடால் திகழ்கிறார். அவர், ரஷிய வீரர் மெத்வதேவைப் புகழ்ந்தார். இந்த இருவரின் பேச்சையும் மக்கள் விடியோவில் பார்க்க வேண்டும் என்றார் மோடி.

பட்டமளிப்பு விழா உரைக்கு யோசனை தேவை

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் ஆற்ற வேண்டிய உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து யோசனைகளைத் தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக அவர் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நான் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க உள்ளேன். இந்தியாவின் புத்திசாலித்தனம் மிகுந்த இளைஞர்களிடையே உரையாற்றும் அந்த வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன். இந்த உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்களும், குறிப்பாக ஐஐடி மாணவர்களும், முன்னாள் மாணவர்களும் தங்கள் யோசனைகளைத் தெரிவிக்க வேண்டும். "நமோ' செயலி மூலமாக யோசனைகளைத் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com