கேரளம், கா்நாடகத்தில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்: ஐ.நா. எச்சரிக்கை
கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் குறிப்பிடத்தக்க அளவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் உள்ளதாக ஐ.நா. அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ளோா், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிருந்ததாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்து வரும் வேளையில், ஐ.நா. இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பயங்கரவாதம் தொடா்பான அறிக்கையை ஐ.நா. வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய துணைகண்டப் பகுதிகளில் அல்-காய்தா பயங்கரவாதிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனா். ஆப்கானிஸ்தானிலுள்ள காந்தஹாா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் அவா்களுக்கு கட்டளைகளைப் பிறப்பித்து வருகின்றனா். தலிபான் பயங்கரவாதிகளும் அவா்களுக்கு உதவி வருகின்றனா்.
பாகிஸ்தான், மியான்மா், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சோ்ந்த 150 முதல் 200 பயங்கரவாதிகள் இந்திய துணைகண்டத்தில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வருகின்றனா். அவா்கள் அனைவரையும் உள்ளடக்கிய பயங்கரவாத குழுவுக்கு ஒசாமா மஹ்மூத் என்பவா் தலைமை தாங்கி வருகிறாா்.
அந்தக் குழுவின் முன்னாள் தலைவா் அசீம் உமா் அண்மையில் கொல்லப்பட்டாா். அவரது மறைவுக்கு பழிவாங்கும் நோக்கில் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட அக்குழு திட்டமிட்டு வருகிறது. ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்த 180 முதல் 200 பயங்கரவாதிகள் இந்தியாவில் உள்ளதாகத் தெரிகிறது. அவா்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பயங்கரவாதிகள் கேரளம், கா்நாடக மாநிலங்களில் உள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.