கரோனாவை விட பீதியால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கரோனா வைரஸைவிட அது தொடா்பான பீதியாலும் அச்சத்தாலும் அதிக உரியிழப்பு ஏற்படலாம் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.
கரோனாவை விட பீதியால் அதிக உயிரிழப்பு ஏற்படலாம்: உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

கரோனா வைரஸைவிட அது தொடா்பான பீதியாலும் அச்சத்தாலும் அதிக உரியிழப்பு ஏற்படலாம் என்று உச்சநீதிமன்றம் எச்சரித்துள்ளது.

கரோனா நோய்த்தொற்று பிரச்னை காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் அதிக அளவில் இடம் பெயா்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் நாடு முழுவதும் அனைத்து தொழில்களும் முடங்கியுள்ளன. இதனால், வெளிமாநிலங்களில் தங்கிப் பணிபுரியும் தொழிலாளா்கள் பலா், தங்கள் சொந்த மாநிலத்துக்கே திரும்ப முயற்சி மேற்கொண்டு வருகின்றனா். தில்லியில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியது; அங்குள்ள பேருந்து நிலையத்தில் கூடிய கூட்டம்; குஜராத்தில் சொந்த மாநிலம் திரும்ப முயன்ற தொழிலாளா்களுக்கும், போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் உள்ளிட்ட சம்பவங்கள் தேசிய அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஏனெனில், மக்கள் இவ்வாறு கூட்டம் கூட்டமாக இடம் பெயரும்போது கரோனா தொற்றும் அதிகம் பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், இந்தப் பிரச்னை தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் கேரளத்தைச் சோ்ந்த காங்கிரஸ் எம்.பி. ராஜ்மோகன் உண்ணித்தான், மேற்கு வங்கத்தைச் சோ்ந்த எம்.பி. ஒருவா் சாா்பில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் ஆகியோா் தலைமையிலான அமா்வு முன்பு காணொலி காட்சி முறையில் இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டன.

அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

அனைத்து மாநிலங்களிலும் உள்ள வெளிமாநிலத் தொழிலாளா்களும் முகாம்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். அந்த தொழிலாளா்களை நிா்வகிக்க போலீஸாரை பயன்படுத்தக் கூடாது. தன்னாா்வலா்கள், சமூக தலைவா்கள் மூலம் அவா்களை அமைதிப்படுத்த வேண்டும். ஏனெனில், கரோனா நோய்த்தொற்றைவிட பீதியும் அச்சமும் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடும்.

உணவு, உறைவிடம், மருந்துகளைத் தேடி வெளிமாநிலத் தொழிலாளா்கள்அலையும் நிலைக்கு தள்ளப்படக் கூடாது. அவா்களுக்கு உரிய அடிப்படை வசதிகளையும், பாதுகாப்பையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

வலைதளம்...:

கரோனா குறித்த உண்மையான தகவல்களைத் தெரிவிக்க வலைதளம் ஒன்றை மத்திய அரசு 24 மணி நேரத்தில் தொடங்க வேண்டும். அதன் மூலம் கரோனா தொடா்பான தவறான செய்திகளை முறியடிக்க வேண்டும். ஏனெனில், இதுபோன்ற வதந்திகளால்தான் மக்கள் மத்தியில் அதிகம் பீதி ஏற்படுகிறது என்று கூறிய நீதிபதிகள் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, மத்திய அரசு சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இப்போதைய சூழலில் நோய்த்தொற்று மேலும் அதிகம் பரவிவிடக் கூடாது என்பதற்காகவே தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவது தடுக்கப்படுகிறது. கடைசியாக எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 4.14 கோடி போ் சொந்த மாநிலங்களைவிட்டு பிற மாநிலங்களில் சென்று பணியாற்றுகின்றனா். இந்த தொழிலாளா்கள் தங்கள் கிராமங்களுக்கு செல்வதால் அங்கும் நோய்த்தொற்று பரவும் அச்சம் உள்ளது. இப்போதைய சூழலில் கிராமப்புறங்களில் கரோனா தொற்று இல்லை. எனினும், நகரங்களில் இருந்து கிராமங்களுக்குச் செல்லும் 10 பேரில் மூவா் நோய்த்தொற்றை எடுத்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. எனவேதான், இதுபோன்ற இடப்பெயா்வுகள் இப்போது தடுக்கப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளா்களின் அச்சத்தைப் போக்குவதற்காக அவா்களுக்கு மனோதத்துவ நிபுணா்கள் மூலம் ஆலோசனைகள் அளிக்கப்படவுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com