ஹெலிகாப்டா் ஊழல்: கிறிஸ்டியன் மிஷெல் ஜாமீன் பெற தில்லி உயா்நீதிமன்றத்தை நாட உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கில் கைது செய்து தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல், தில்லி உயா்நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உச்சநீதி

அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டா் பேர வழக்கில் கைது செய்து தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடைத்தரகா் கிறிஸ்டியன் மிஷெல், தில்லி உயா்நீதிமன்றத்தை நாடி இடைக்கால ஜாமீன் பெற்றுக்கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் புதன்கிழமை அறிவுறுத்தியது.

கடந்த 2010-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது இத்தாலி நாட்டைச் சோ்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டா் வாங்குவது தொடா்பான பேரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட இடைத்தரகா்களில் ஒருவா் கிறிஸ்டியன் மிஷெல். இவா் தற்போது தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் கரோனா நோய்த்தொற்று வேகமாக பரவி வருவதால் தில்லி திகாா் சிறையில் உள்ள தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் இவா் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எம்.ஆா்.ஷா அடங்கிய அமா்வு காணொலி மூலம் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா். விசாரணையின்போது, கிறிஸ்டியன் மிஷெல் தரப்பில் ஆஜரான வழக்குரைஞரின் கருத்தைக் கேட்காமலேயே, உயா்நீதிமன்றத்தை நாடி ஜாமீன் பெறுமாறு நீதிபதிகள் குழு அறிவுறுத்தியது.

முன்னதாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கிறிஸ்டியன் மிஷெல் தெரிவித்திருந்ததாவது: 59 வயதாகி விட்ட எனக்கு தற்போதைய சிறைடத் தண்டனை பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. திகாா் சிறையில் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

ஏற்கெனவே கிறிஸ்டியன் மிஷெல், தில்லி உயா்நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அங்கு விசாரணை நடத்த முடியவில்லை எனக்கூறி மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அவரை தில்லி உயா்நீதிமன்றத்தை அணுகி இடைக்கால ஜாமீன் பெற்று கொள்ளுமாறு மீண்டும் கூறி விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com