ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத் துவக்கத்தில் கரோனா தீவிரமடையலாம்: மருத்துவர் தேவி ஷெட்டி

கர்நாடகமோ அல்லது இந்தியாவோ கரோனாவின் பாதிப்பு இன்னும் தீவிரமடையவில்லை.
ஏப்ரல் இறுதி அல்லது மே மாதத் துவக்கத்தில் கரோனா தீவிரமடையலாம்: மருத்துவர் தேவி ஷெட்டி


பெங்களூரு: கர்நாடகமோ அல்லது இந்தியாவோ கரோனாவின் பாதிப்பு இன்னும் தீவிரமடையவில்லை. அது ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாதத் துவக்கத்தில் தீவிரமடையலாம் என்று நாராயணா ஹெல்த் நிறுவனர் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தற்போது பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு உத்தரவு பாதிப்பை 50% அளவுக்குக் குறைக்கும் என்று கூறியிருக்கும் தேவி பிரசாத், பரிசோதனை, ஊரடங்கு, சமூக இடைவெளி அனைத்தையும் இன்னும் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் சாத்தியக் கூறு மக்களின் நீதிமன்றத்தில்தான் உள்ளது, அரசின் நீதிமன்றத்தில் அல்ல என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவில் மிகக் குறைவான நபர்களுக்கே  கரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதனை அதிகரிக்க வேண்டும். வெறும் சோதனை செய்வதால் மட்டும் நோயாளிக்கு குணமாகிவிடாது. ஆனால், நோய் பரவாமல் கட்டுப்படுத்தப்படும். நிலைமை விபரீதமாவதற்குள் கரோனா பரிசோதனை நடைமுறைகளை அதிகரிக்க வேண்டும்.

மற்ற நாட்டினரை விடவும் இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவது குறித்து கருத்துக் கூறியிருக்கும் மருத்துவர் ஷெட்டி, இந்தியர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகக் கூறிக் கொள்ளலாம். ஆனால் கரோனா தொற்று சீனா, அமெரிக்கா, இத்தாலி நாடுகளில் எப்படி நடந்து கொண்டதோ, அப்படியேதான் இந்தியாவிலும் இருக்கிறது. எனவே, உலகில் உள்ள மற்ற அனைவரையும் போலவே இந்தியர்களும் இருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். ஒரு வேளை பலரும் சொல்வதைப் போல இந்தியர்களுக்கு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது என்பது உண்மையானால், அதை விட மகிழ்ச்சியான விஷயம் எதுவும் இல்லை. எப்போதுமே மிக மோசமான விஷயத்துக்கு நாம் தயாராக வேண்டும், நல்ல விஷயம் நடந்தால் சந்தோஷம்தான் என்றார்.

விட்டமின் சியை அதிகமாக எடுத்துக் கொண்டால் கரோனாவில் இருந்து தப்பிக்க முடியுமா என்ற கேள்விக்கு, விட்டமின் சி அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு சாப்பிடுங்கள், இன்னும் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், அது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால், ஆனால், இவை எல்லாம் கரோனாவில் இருந்து காக்கும் என்று எந்த அறிவியல் பூர்வ சாட்சியமும் இல்லை, ஏன் என்றால் கரோனா மிகவும் புதிய தொற்று. அது எப்படி செயல்படும் என்பதற்கு இதுவரை ஒரு தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை. 

நன்றாக உறங்குங்கள். சத்தான உணவுகளை சாப்பிடுங்கள், மன நலத்தை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள். இதுவும் கரோனாவை எதிர்த்துப் போராட நமக்கு உதவும் என்கிறார் மருத்துவர் தேவி ஷெட்டி.

கரோனா தொற்றால் பொருளாதார பாதிப்பு குறித்து அவர் பேசுகையில், முதலில் ஒரு விஷயத்தை நான் தெளிவாக விளக்க விரும்புகிறேன். பொருளாதார விஷயம் எல்லாம் பிறகுதான், நாம் உயிரோடு இருந்தால்தான் அது விஷயமே. முதலில் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உணருங்கள் என்று தெளிவாகக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com