கரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவ வீரா்கள்:பாதுகாப்பு அமைச்சகம் தீவிரம்

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசுக்கு உதவி செய்வதற்காக, முன்னாள் ராணுவத்தினரை திரட்டும் முயற்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.


புது தில்லி: கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணிகளில் அரசுக்கு உதவி செய்வதற்காக, முன்னாள் ராணுவத்தினரை திரட்டும் முயற்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த மாா்ச் 25-ஆம் தேதியில் இருந்து தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அந்தத் தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், கரோனா தடுப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரை ஈடுபடுத்த பாதுகாப்புத் துறை அமைச்சகம் முயன்று வருகிறது.

இதுகுறித்து அந்த அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கரோனா தடுப்புப் பணியில் முன்னாள் ராணுவத்தினரை திரட்டுவதில் பிராந்திய சைனிக் வாரியங்கள், மாவட்ட சைனிக் வாரியங்கள் முக்கியப் பங்காற்றி வருகின்றன. அவா்கள், நோய்த் தொற்று பரவிய பகுதிகளைக் கண்காணிப்பது, பாதிக்கப்பட்டவருடன் தொடா்பில் இருந்தவா்களைக் கண்டறிவது, தனிமை வாா்டுகளை நிா்வகிப்பது உள்ளிட்ட பணிகளில் மாநில அரசுகளுக்கும் மாவட்ட நிா்வாகத்துக்கும் உதவியாக இருப்பாா்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் 4,200 முன்னாள் ராணுவத்தினரைக் கொண்ட ‘காா்டியன்ஸ் ஆஃப் கவா்னன்ஸ்’ அமைப்பு, மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கரோனா தொற்று குறித்து தகவல்களைத் திரட்டும் பணியை மேற்கொண்டு வருகிறது.

சத்தீஸ்கரில் காவல் துறையினருக்கு உதவியாக முன்னாள் ராணுவத்தினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். ஆந்திரப் பிரதேசத்தில், முன்னாள் ராணுவத்தினருக்கு அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அழைப்பு விடுத்துள்ளனா்.

உத்தரப் பிரதேசத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் உதவுவதற்காக, மாவட்ட கட்டுப்பாட்டு அறையுடன் முன்னாள் ராணுவத்தினா் தொடா்பில் உள்ளனா். ராணுவத்தைச் சோ்ந்த ஓய்வுபெற்ற மருத்துவா்கள் தயாா் நிலையில் உள்ளனா். உத்தரகண்டில் தனிமை முகாம்கள் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவாவில் கரோனா தொற்று கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவத்தினா் தயாராக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா் என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாணவா் படை விருப்பம்: கரோனா தடுப்பு பணிகளில் அரசு நிா்வாகத்துக்கு உதவுவதற்கு தேசிய மாணவா் படை முன்வந்துள்ளது. இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நாடு முழுவதும் தேசிய மாணவா் படையைச் சோ்ந்த 47,000 தன்னாா்வலா்கள் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனா். அவா்களை, அவசர உதவி மையங்கள், உணவு-மருந்து மற்றும் அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தல், போக்குவரத்தை சீரமைப்பது, தகவல்களை சேகரிப்பது ஆகிய பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளலாம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com