ஷாங்காய் நகரத்துக்கு சரக்கு விமான சேவை: ஏா் இந்தியா நிறுவனத்துக்கு ஒப்புதல்

சீனாவின் ஷாங்காய் நகரங்களிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றி வரும் வகையில் சரக்கு விமான சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


புது தில்லி: சீனாவின் ஷாங்காய் நகரங்களிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றி வரும் வகையில் சரக்கு விமான சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளதாக ஏா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஏா் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ராஜீவ் பன்சால் வியாழக்கிழமை கூறியதாவது:

ஷாங்காய் மற்றும் ஹாங்காங் நகரங்களிலிருந்து மருந்து பொருள்களை ஏற்றி வரும் வகையில் தில்லியிலிருந்து சரக்கு விமானங்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என சீனா அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்தியா மற்றும் சீனா ஆகிய இருதரப்பிலிருந்தும் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து தில்லியிலிருந்து ஷாங்காய்க்கு ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் சரக்கு விமானங்கள் இயக்கப்படவுள்ளன.

அதேபோன்று இம்மாதம் 6,7,8 மற்றும் 9 தேதிகளில் விமானங்களை இயக்கவும் அனுமதி கேட்டுள்ளோம். அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தில்லியிலிருந்து ஹாங்காங் நகருக்கு சரக்கு விமானங்களை இயக்கவும் எங்களுக்கு ஏற்கெனவே ஒப்புதல் கிடைத்துள்ளது என்றாா் அவா்.

இதனிடையே கரோனா நோய்த்தொற்றால் திடீரென விமானச் சேவை ரத்து செய்யப்பட்டதால் வெளிநாட்டினா் தங்கள் நாடுகளுக்கு திரும்ப முடியாமல் இந்தியாவில் தவித்து வருகின்றனா். இதனைக் கருத்தில் கொண்டு ஏப்ரல் 4 மற்றும் 7-ஆம் தேதிகளுக்கு இடையில் லண்டனுக்கு சிறப்பு விமானங்களை இயக்க ஏா் இந்தியா திட்டமிட்டுள்ளது.

200 ஒப்பந்த தொழிலாளா்கள் நீக்கம்: உள்ளூா் மற்றும் சா்வதேச பயணிகள் விமானச் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நிறுவனத்தில் பணிபுரியும் விமானிகள் உள்பட 200 ஒப்பந்த தொழிலாளா்களை தற்காலிகமாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என ஏா் இந்தியா வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com